நீர்நிலைகளில் கரம்பை மண்ணை அள்ள விதிகளை தளர்த்த விவசாயிகள் கோரிக்கை - அரசு செவி சாய்க்குமா?
கோடை உழவை சித்திரை 1-ம் நாள் தொடங்குவோம். அதற்குள் எங்களுக்கு கரம்பை மண் அவசியமாகிறது. ஆனால், அரசு கூறும் விதிமுறைகளின் படி எங்களுக்கு குறிப்பட்டு காலத்துக்குள் பெற முடியாத சூழல் ஏற்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஊருணிகள், 50-க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பாசனக் குளங்கள் உள்ளன. இந்நிலையில், கடந்த திங்கிட்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊராட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊருணிகள், குட்டைகள், சிறுபாசனக்குளங்கள், நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாசனக்குளங்கள் ஆகியவற்றில் விவசாயிகளுக்கு தேவையான கரம்பை மண் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.
விவசாயிகளுக்கு தங்களுக்கு தேவையான கரம்பை வேண்டுவோர் ஏப்.1-ம் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். அதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆட்சியரின் அறிவுரைப்படி அனைத்து ஊராட்சிகளில் முகாம் நடத்தப்பட்டு விவசாயிகளிடம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால், கரம்பை அள்ள விதிமுறைகளை தளர்த்தினால் மட்டுமே, அது எங்களுக்கு சாத்தியப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தாண்டு பருவமழை பொய்த்து போனதால் அனைத்து நீர்நிலைகளும் வறண்டு வருகின்றன. இதனால் கடும் குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் பருவமழை பொய்த்து போனதால், மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணை வித்துகள், பணப்பயிர்கள் போதிய விளைச்சல் இன்றி மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது என்கின்றனர் விவசாயிகள்.
இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கூறுகையில், "கடந்த பல ஆண்டுகளாக ஊருணிகள், குட்டைகள், பொதுப்பணித்துறை குளங்கள் மண்மேடாக காணப்படுகின்றன. வரும் பருவ காலத்துக்குள் இந்த நீர்நிலைகள் அனைத்தும், தற்போது நிலவும் கோடையை பயன்படுத்தி தூர்வார வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் விவசாய பயன்பாட்டுக்கு வண்டல் மண் என்றழைக்கப்படும் கரம்பை மண் தேவைப்படுவதால், அதனை நீர்நிலைகளில் இருந்து எடுக்க அரசிடம் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து வருகிறோம்.
ஆனால், கரம்பை மண் அள்ளுவதற்கு பல்வேறு விதிமுறைகளை கூறி கெடுபிடி செய்வதால் பெரும் இடையூறாக உள்ளது. கரம்பை மண் அள்ள இன்று விவசாயிகள் வழங்கி உள்ள மனுக்கள், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சென்று, அங்கிருந்து வட்டாட்சியரின் கவனத்துக்கு அனுப்பப்பட்டு, அவர் பரிந்துரைக்கு மனுக்கள் மண் பரிசோதனைக்கு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் விவசாயிகள் குறிப்பிட்டுள்ள நிலங்களுக்கு சென்று, அதனை ஆராய்ந்து அந்த நிலத்துக்கு கரம்பை மண் அவசியமா என்பதை பரிசோதித்து அறிக்கை வழங்குவார்கள். அதன் பின்னர் அந்த அறிக்கை கனிம வளத்துறை அனுப்பி வைக்கப்பட்டு, கரம்பை மண் அள்ளுவதற்கான மண் அளவை அவர்களே அறிவிப்பார்கள்.
மானாவாரி விவசாயத்துக்கு கோடை உழவு முக்கியத்துவம் பெறுகிறது. கோடை உழவை சித்திரை 1-ம் நாள் தொடங்குவோம். அதற்குள் எங்களுக்கு கரம்பை மண் அவசியமாகிறது. ஆனால், அரசு கூறும் விதிமுறைகளின் படி எங்களுக்கு குறிப்பட்டு காலத்துக்குள் பெற முடியாத சூழல் ஏற்படும். கடந்தாண்டும் அரசின் விதிமுறைகளால் கரம்பை மண் என்பது கானல் நீராகிவிட்டது. இந்தாண்டு அதே விதிமுறைகளை அப்படியே கடைபிடிக்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு அனுமதி பெற முடியாத சூழல் ஏற்படும். எனவே, விதிமுறைகளை தளர்த்தி வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர் அனுமதியுடன் நீர்நிலைகளில் இருந்து கரம்பை மண் அள்ள அனுமதி வழங்க வேண்டும்" என்றார்.