ஒரு ஆட்சி அழியும் முன்பு இப்படித்தான் நடக்கும்.. இது 1977 எமர்ஜென்சியை நினைவுபடுத்துகிறது - ஆர்.எஸ்.பாரதி
ஆணாகப் பிறந்து வீணாகப் போனவர் அண்ணாமலை. பொய் பேசுவதில் நம்பர் ஒன் அண்ணாமலை. வெள்ளை அறிக்கை கேட்கிறார். வெள்ளரிக்காய் கூட தர முடியாது...
நெல்லை மத்திய மாவட்ட திமுக சங்கர்நகர், நாரணம்மாள்புரம் பேரூர் கழகம் சார்பில் நெல்லை மாவட்டம் தாழையூத்தில் கழகத் தலைவர் பிறந்தநாள் விழா, திமுக அரசின் மூன்றாண்டு சாதனை மற்றும் சேலம் இளைஞரணி மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமைக்கழக வழக்கறிஞர் சூரியா வெற்றிகொண்டான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், ”முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்வராகி பல மக்கள் நலத்திட்டங்களை மக்களுக்கு தந்தாலும் ஆட்சி ஒரு நெருக்கடி நிலையை சந்தித்து வருகிறது. மழை வெள்ளத்தால் தென்மாவட்டம் கடும் பாதிப்புக்கு உள்ளானது. மக்கள் வீடிழந்து உணவுக்கு, தண்ணீருக்கு பரிதவித்தனர். அப்போது முதல்வர் 6 ஆயிரம் வழங்கினார். இயற்கை பேரிடருக்கு ஒன்றிய அரசிடம் உரிய நிதியை கேட்டால் தர மறுக்கிறார்கள். இரண்டாண்டு காலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது துரித நடவடிக்கை எடுத்து அனைவரின் முகத்தில் இருந்தும் மாஸ்க்கை கழற்றியவர் முதல்வர் ஸ்டாலின். நிதி நெருக்கடி உள்ளிட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களை வாக்குறுதி அளித்தபடி வழங்கி வருகிறார். ஆனால் மோடி 15 லட்சம் ரூபாய் தருவேன் என்றார். 10 ஆண்டுகள் கடந்துவிட்டது. இன்னும் பணம் வரவில்லை.
மேற்படிப்பு படிக்கும் இளம் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை கொடுத்து அவர்கள் படிப்பை தொடர முதல்வர் உதவி வருகிறார். முதல்வரின் ஊக்கத்தொகை பெறும் இளம் பெண்கள் வருங்காலத்தில் மருத்துவர், ஆட்சியர், உயர் அதிகாரிகள் பொறுப்பில் கண்டிப்பாக அமர்வார்கள், அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினை நினைத்து பார்ப்பார்கள். ஒரு காலத்தில் படித்த பெண்களின் சதவீதம் 30-ஆக இருந்து, தற்போது கல்வி ஊக்கத்தொகை வழங்குவதால் படித்த பெண்களின் எண்ணிக்கை 52 சதவீதமாக உயர்ந்துள்ளது. அண்ணா அருகே கலைஞரை அடக்கம் செய்ய ஆறடி இடம் கொடுக்காமல் எடப்பாடி மறுத்தார். யாரும் கேட்காமலே விஜயகாந்துக்கு அரசு மரியாதை வழங்கினார் ஸ்டாலின். 2016-இல் விஜயகாந்திற்கு திமுக கூட்டணியில் சேர கலைஞர் அழைப்பு விடுத்தார். தனியாக நிற்காமல் எங்கள் கூட்டணிக்கு வந்திருந்தால் கலைஞர் கண்டிப்பாக முதல்வராக இருந்திருப்பார். கலைஞர் இறக்கும்பொழுது எதிர்க்கட்சித் தலைவர் பதவி இல்லாமல் இறக்க காரணம் விஜயகாந்த்தான். ஒன்றிய அரசு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ ஆகியவற்றின் மூலம் மிரட்டுகிறது. ஒரு ஆட்சி அழியும் முன்பு இப்படித்தான் நடக்கும் இது 1977 எமர்ஜென்சியை நினைவுபடுத்துகிறது. அப்போதும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தது. கெஜ்ரிவால் உள்ளிட்ட முதல்வர்களை மத்திய அரசு தொடர்ந்து கைது செய்ய துடிக்கிறது
யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் நம்முடைய முதல்வர் மு.க ஸ்டாலின் கால் முடியை கூட தொட்டுப் பார்க்க முடியாது. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை. திமுக இந்துக்களின் விரோதி என்று நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். அவருக்கு கூற விரும்புகிறேன். பெரிய கோவில்கள் உள்ள இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக மீது எந்த குறையும் சொல்ல முடியாது. ஆணாகப் பிறந்து வீணாகப் போனவர் அண்ணாமலை. பொய் பேசுவதில் நம்பர் ஒன் அண்ணாமலை. வெள்ளை அறிக்கை கேட்கிறார். வெள்ளரிக்காய் கூட தர முடியாது. சுடுகாடு வா வா என அழைக்கும் 17 பேரை பாஜகவில் இணைத்ததாக அண்ணாமலை கூறுகிறார். அவர்கள் ஃபியூஸ்போன பல்புகள்” என கூறினார்.