தென்காசி: மரித்துப்போன மனிதநேயம்..! உதவ ஆளின்றி உயிர் பிரிந்த சோகம்..! வெளியான அதிர்ச்சி வீடியோ..!
”கீழே விழுந்த கல்யாண சுந்தரத்தை ஆட்டோவில் இருந்து இறங்கி வந்து பார்த்துவிட்டு அவருக்கு உதவாமல் அங்கிருந்து ஆட்டோவை அவர் எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது”
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் முப்புடாதி அம்மன் கோவில் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராமர். இவரது மகன் கல்யாண சுந்தரம் (வயது 47). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில் கடந்த 23ம் தேதி இரவு கல்யாணசுந்தரம் மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலை அட்டைகுளம் அருகே நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கல்யாண சுந்தரத்தின் மீது மோதியதில் கல்யாணசுந்தரம் தூக்கி வீசப்பட்டார்.
இதில் கல்யாணசுந்தரம் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார். அதன்பின் அருகில் இருந்தவர்கள் கல்யாண சுந்தரத்தை மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன் தினம் அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடனே அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க, குடும்பத்தினர் முன்வந்தனர்.
அதன்படி, கல்யாணசுந்தரத்தின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. அதன்பின் கடையநல்லூருக்கு கொண்டு வந்த அவரின் உடலுக்கு அரசு சார்பில் தென்காசி ஆர்.டி.ஓ., லாவண்யா மலர் வளையம் வைத்து தொழிலாளியின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தினர். அப்பொழுது கடையநல்லூர் தாசில்தார் சுடலைமணி கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் விபத்து நடந்த இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றினர். அதில் நடந்து சென்ற கல்யாண சுந்தரத்தின் மீது ஆட்டோ ஒன்று மோதி அவர் தூக்கி வீசப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் கீழே விழுந்த கல்யாண சுந்தரத்தை ஆட்டோவில் இருந்து இறங்கி வந்து பார்த்துவிட்டு அவருக்கு உதவாமல் அங்கிருந்து ஆட்டோவை அவர் எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. மேலும் விபத்து நடந்த சிறிது நேரத்திலே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்ற நிலையில் விபத்து நடந்து 40 நிமிடமாக யாருமே அவருக்கு உதவாத நிலையில் அவர் விழுந்து கிடப்பதை பார்த்து பலரும் அதனை கடந்து செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. இதனால் மூளைச்சாவடைந்து அவர் உயிர் பிரிந்த சம்பவம் வேதனையையும், குடும்பத்தினரிடையே சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற ஆட்டோவை அருகில் உள்ள சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடித்து மேலக்கடையநல்லூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சங்கர் (40) என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரை பிடித்து கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..