தென்காசி: கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா!!!
”இங்கு சிவன் வேறு விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை சுட்டிக் காட்டும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அப்போது சங்கரநாராயணராக சிவபெருமான் காட்சி கொடுப்பார்”
சங்கரன்கோவில் வரலாறு:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலம் ஆகும். இங்கு புராணப்படி, இங்குள்ள அம்மன், சிவனை வேண்டி ஊசி முனை மேலிருந்து தவம் செய்யும் யோகினி. சங்கன், பதுமன் என்ற இரு நாக மன்னர்களிடையே சண்டை மூண்டுள்ளது. அப்போது சங்கன் தன் கடவுளான சிவனே அதிக ஆற்றல் உள்ளவர் என்றும், பதுமன் தன் விருப்பக் கடவுளான திருமாலே அதிக ஆற்றல் உடையவர் என்றும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருவரும் அம்மனிடம் சென்று முறையிட்டுள்ளனர். அப்போது இவர்கள் இருவர் மட்டுமின்றி உலக மக்களும் இறவனின் முழு உருவத்தை உணர வேண்டும் என்று அம்மன் சிவபெருமானிடம் வேண்டியுள்ளார். அம்மனின் வேண்டுகோளுக்கிணங்க சிவன், சங்கரநாராயணராக காட்சியளித்துள்ளார். அதாவது (சங்கரன் - சிவன், நராயணன் - திருமால் ) கடவுள் இருவருமே சமம் என்பதை உணர்த்தும் வகையிலும், அன்பினாலும், தியாகத்தினலும் மட்டுமே கடவுளை அடைய முடியும் என சிவனும் திருமாலும் இணைந்த சங்கர நாராயணராக தோன்றினார். அதன்பின்னர் நாகர் இருவரும் அம்மனுடன் குடியிருந்து இறைவனை வழிபட்டு வந்துள்ளனர் என்பது வரலாறு.
ஆடித்தபசு:
புகழ்பெற்ற இத்திருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடித்தபசு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கர நாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்குக் காட்சியளித்த நாளை நினைவு கூறும் வகையில் இவ்விழா ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. மேலும் இக்கோவிலில் அமைந்துள்ள சிரீ சக்கர பீடத்தில் நோயாளிகள், தீய சக்திகளால் ஆட்கொள்ளப்பட்டவர்கள், மன நலமற்றவர்கள் ஆகியோரை அதில் அமர வைத்தால் நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம். இங்கு சிவன் வேறு விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை சுட்டிக் காட்டும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அப்போது சங்கரநாராயணராக சிவபெருமான் காட்சி கொடுப்பார்.
திருவிழாவும், பாதுகாப்பு ஏற்பாடும்:
இத்திருவிழா இன்று காலை சரியாக 5.00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் கோமதி அம்மன் காலையில் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். வரும் 19 ம் தேதி காலை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா வரும் 21ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான பக்தர்கள் தென்மாவட்டங்களில் இருந்து கலந்து கொள்வர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவுன்படி சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதீர் மற்றும் காவல்துறையினர் செய்து வருகின்றனர். மேலும் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக நகரின் முக்கிய பகுதிகளில் 50 க்கும் மேற்ப்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொடியேற்று விழாவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் துரை வையாபுரி, ராணிஸ்ரீ குமார், சட்டமன்ற உறுப்பினர் ராஜா, நகர் மன்ற தலைவி உமாமகேஸ்வரி, அறங்காவலர் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்