பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் - தென்காசி காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை
இனிவரும் காலங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கைது செய்து சிறையில் அடைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபடுபவர்கள் மீது மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பெயரில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் தொடர்ச்சியாக சாகசம் செய்தும், அபாயகரமான முறையில் வாகனத்தை இயக்கியும் அதனை வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அதன்படி குற்றாலம் அருகே பைக்கில் சாகசம் செய்து 3 இளைஞர்கள் அதனை வீடியோ பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளனர். அவர்கள் மூன்று பேரையும் காவல்துறையினர் கண்காணித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பைக்கில் சாகசத்தில் ஈடுபட்ட செய்யது சுலைமான் தாதா பீர் (22), முகமது தெளபிக் (21), மற்றும் மணிகண்டன் (21) ஆகியோர் 3 பேர் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டனர். தொடர்ந்து அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன் விலை உயர்ந்த இருசக்கர வாகனமும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது போன்ற உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் ஆபத்தான முறையில் சாகசங்களை செய்து பிற இளைஞர்களுக்கு தவறான முன் உதாரணமாக இருக்கக் கூடாது எனவும், இனிவரும் காலங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கைது செய்து சிறையில் அடைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
இதே போன்று கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வடகரை கீழத்தெருவை சேர்ந்த ஆசிக், வடகரை ரஹ்மானியாபுரம் மேலத்தெருவை சேர்ந்த ஷேக் ஒலி, அதே போல புளியரை கொல்லம் மெயின் ரோட்டை சேர்ந்த கெளதம் கிருஷ்ணா ஆகியோர் பை ரேஸில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர், அதோடு மூவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டது. நெல்லையிலும் வீலிங் செய்து வெடி வெடித்து சென்ற சுஜின் மற்றும் அதனை சமூக வலைத்தலங்களில் பதிவிட்ட மணிகண்டன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.