கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு; ஆதாரமும் இருக்கு - அடித்து சொல்லும் ஐஐடி காமகோடி - மீண்டும் சர்ச்சை
அமெரிக்காவில் வெளியான இதழ்களில் பஞ்சகவ்யத்தில் எதிர்ப்பு சக்தி உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் அதற்கு ஆதாரம் இருக்கிறது எனவும் ஐஐடி காமகோடி அடித்து கூறுகிறார்.
இதுகுறித்து பேசிய ஐஐடி இயக்குநர் காமகோடி “பண்டிகையின்போது நான் பஞ்சகவ்யம் உண்பது வழக்கம். பஞ்சகவ்யத்தில் மருத்துவ குணங்கள் உள்ளது என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. மாட்டுச் சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகியவை கலந்ததே பஞ்சகவ்யம். கோமியம் தொடர்பாக சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். கோமியத்தை குடித்தால் உடல்நல பாதிப்பு ஏற்படும் என வெளிவந்துள்ள ஆராய்ச்சி குறித்து நான் படிக்கவில்லை.
அமெரிக்காவில் வெளியான இதழ்களில் பஞ்சகவ்யத்தில் எதிர்ப்பு சக்தி உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
கோமியம் குடித்ததால் தந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சல் குணமானது என்றும், கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது எனவும் காமகோடி பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மருத்துவர் ரவீந்தர் கூறுகையில், “மாட்டுச் சாணம் சாப்பிடுவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம், மக்களிடம் அதை ஏன் சொல்ல வேண்டும்? கோமியத்தில் எந்தவிதமான மருத்துவ குணங்களும் இல்லை. ஆய்வுகள் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. அறிவியல் உண்மைகளை மறைத்து தவறான தகவலை பரப்புகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

