Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை தாக்கியவன் இந்தியாவை சேர்ந்தவனே இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. விசாரணையின் முழு விவரம் இதோ...

ஜனவரி 16-ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில், பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், அவரை கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் குற்றவாளி பிடிக்கப்பட்டு, அவன் இந்தியாவைச் சேர்ந்தவனே அல்ல என்ற அதிர்ச்சிதரும் தகவல் வெளியாகியுள்ளது.
களமிறங்கிய 150 பேர் கொண்ட போலீஸ் குழு
சைஃப் அலி கான் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அவரது குடியிருப்பில் நுழைந்த நபரின் சிசிடிவி காட்சி ஒன்று வெளியானது. அதை தொடக்கப் புள்ளியாக வைத்து விசாரணையை தொடங்கிய போலீசார், 150 பேர் கொண்ட குழுவை அமைத்து, செல்போன் டிராக்கிங், பணியாளர்களிடம் விசாரணை என, வழக்கை துருவ ஆரம்பித்தது. தானே பகுதியின் மூலை முடுக்குகளில் சல்லலை போட்டு தேடிய போலீசாரிடம், திருடன் வசமாக சிக்கினான். போலீசார் இதற்காக, பல பகுதிகளில் உள்ள சுமார் 500 சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்துள்ளனர். பின்னர் வேலைக்கு ஆட்களை அமர்த்தும் ஒரு ஏஜென்சியில் விசாரித்து, குற்றவாளி தானே பகுதியில் ஒரு ஹேட்டலில் வேலைக்கு அமர்த்தப்பட்டதை அறிந்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி-க்களையும் ஆராய்ந்து, அவனது நகர்வுகளை கண்காணித்து, இறுதியில் தட்டித் தூக்கியுள்ளனர்.
குற்றவாளி இந்தியாவை சேர்ந்தவன் அல்ல
போலீசாரின் தேடுதல் வேட்டையில் 30 வயது நிரம்பிய ஷரிஃபுல் இஸ்லாம் ஷெஷாத் முகமது ரோஹிலா அமிர் ஃபகிர் என்ற நபர் சிக்கினார். அந்த நபர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும், கடந்த 2024-ல் சட்டவிரோமாக இந்தியாவிற்குள் நுழைந்து, வேலை தேடி மும்பைக்கு வந்ததாக விசாரணையில் தெரியவந்தது. மேலும், மிகப்பெரிய திருட்டு ஒன்றை செய்துவிட்டு, மீண்டும் வங்கதேசத்திற்கே செல்வதுதான் அவனது திட்டம் என்பதை போலீசாரிடம் அவன் தெரிவித்துள்ளான்.
அதோடு, தான் வந்தது சைஃப் அலி கானின் வீடு என்று அவனுக்கே தெரியாது என்றும், அதற்கு முன்னதாக வேறொரு வீட்டிற்குள் புக நினைத்து, அந்த முயற்சியில் தோல்வியடைந்து சைஃபின் வீட்டிற்குள் புகுந்ததாகவும் அவன் தெரிவித்துள்ளான்.
பக்காவாக ஸ்கெட்ச் போட்ட கொள்ளைக்காரன்
பிரபலமானவர்கள் வசிக்கும் 13 மாடிகள் கொண்ட சத்குரு ஷரன் என்ற அந்த அடுக்கு மாடி குடியிருப்புக்குள் சாதாரணமாக வந்துவிடவில்லை அந்த திருடன். 2024 டிசம்பர் 31-ம் தேதி, புதுவருடம் பிறக்கும் நேரத்தில் நகர் வலம் வந்து, அந்த ஏரியாவை நோட்டமிட்டுள்ளான்.
மத்திய மும்பையின் வோர்லி-கோலிவாடா பகுதியில் வசித்து வந்த திருடன், அதற்கு முன்னரே, ஆட்டோ ஒன்றை வாடகைக்கு எடுத்து, பாந்த்ரா மற்றும் கர் பகுதிகளை ஆராய்ந்துள்ளான். அதோடு, பணக்காரர்கள், பிரபலங்கள் வசிக்கும் பகுதியை பார்க்க வேண்டும் என்று ஆட்டோகாரரிடம் கூறி, அந்த பகுதிகளின் நிலவியலை படித்த அவன், ஜனவரி 15-ம் தேதி தனது வேட்டையை அரங்கேற்ற வேண்டும் என்று திட்டமிட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.
தொடர்ந்து, ஜனவரி 16-ம் தேதி இரவு, பாந்த்ரா ரயில் நிலையம் வந்து, சிசிடிவியிலிருந்து தப்புவதற்காக, முக்கிய சாலைகள் வழியாக வராமல், குறுக்கு சந்துகளில் புகுந்து, அந்த அடுக்குமாடி குடியிருப்பை அடைந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர், அந்த குடியிருப்பின் அருகே உள்ள கட்டடத்தின் 4 அடி உயர மதில் சுவர் வழியாக எகிறிக் குதித்து, ஷரன் குடியிருப்புக்குள் வந்துள்ளான். அப்போது அங்கு இந்த காவலாளி உறங்கிக்கொண்டிருந்ததாகவும், சிசிடிவி-க்கள் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
பின்னர், அந்த வளாகத்தில் இருந்த ஒரு ஏணியை பயன்படுத்தி ஏறிய அவன், தொடர்ந்து குழாயை பிடித்து ஏறி, கட்டிடத்தின் உள் பகுதிக்குள் சென்றுள்ளான். பின்னர் படி வழியாக சைஃபின் வீட்டை அவன் அடைந்துள்ளான். அப்போதுதான் ஒரு சிசிடிவியின் அவன் சிக்கியுள்ளான்.
போலீசாரின் தொடர் விசாரணையில், மும்பை மற்றும் தானே பகுதியில் 6 மாதங்களாக வெவ்வேறு பெயர்களின் அவன் தங்கியிருந்ததும் தெரியவந்தது. பணம் மட்டுமே அவனது குறிக்கோளாக இருந்ததாகவும், ஒரு பெரிய கொள்ளையை அரங்கேற்றிவிட்டு வங்கதேசத்திற்கு தப்ப இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.





















