ராமநாதபுரம் நகராட்சியில் போட்டியின்றி 2 இடங்களில் வென்ற திமுக; அதிர்ச்சியில் அதிமுக
ராமநாதபுரம் நகராட்சியில் 2 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து ராமநாதபுரம் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் இருவருக்கும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றுகளை வழங்கினார்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு ஜனவரி 28 ஆம் தேதியிலிருந்து பல்வேறு அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில் ராமநாதபுரம் நகரசபையில் 33 வார்டுகளுக்கு நடை பெற உள்ள தேர்தலில், 33 வார்டுகளில் போட்டியிட மொத்தம் 196 வேட்புமனுக்கள் தாக்கல் பெறப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையரும், தேர்தல் அலுவலருமான சந்திரா தெரிவித்திருந்தாா்.
தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்ற போது., ராமநாதபுரம் 7வது வார்டில் திமுக சார்பில் பிரவீன் தங்கம் என்பவரும், அதிமுக சார்பில் சோமசுந்தரபாண்டியன் என்பவரும் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்புமனுக்கள் தேர்தல் அலுவலர் சந்திரா தலைமையில் பரிசீலனை செய்யப்பட்டது. அதில் அதிமுகவைச் சேர்ந்த சோமசுந்தர பாண்டியனின் வேட்புமனுவில் அடித்தல் திருத்தல் இருந்ததோடு, உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் அலுவலர் சந்திரா அவரது வேட்புமனுவைத் தள்ளுபடி செய்ததாக கூறப்பட்டது.
இதனால் திமுக சார்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட பிரவீன் தங்கம் போட்டியின்றி வெற்றி பெறும் சூழல் உருவானது. இந்த தகவலை அறிந்த அந்தப்பகுதி அதிமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு வந்து தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திராவை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதேநேரம் அங்கு வந்த திமுகவினரும் அதிமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீசார் இரு தரப்பினரிடமும் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், வேட்புமனு பரிசீலனை முடிவு பெற்று நேற்று வாபஸ் பெறப்பட்டது. வேட்புமனு பரிசீலனையின் போது 7 வது வார்டு அதிமுக வேட்பாளர் சோமசுந்தர பாண்டியன் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அதில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பிரவீன் தங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல் நேற்று 29 வது வார்டு அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மீனாட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஆனந்தி ஆகிய இருவரும் தங்களுடைய வேட்புமனுக்களை வாபஸ் பெற்றதால், திமுக வேட்பாளர் ஆர்.கே.கே காயத்ரி கார்மேகம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'திமுகவினர் கொண்டாட்டம்'
ராமநாதபுரம் நகராட்சியில் 2 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து ராமநாதபுரம் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரா இருவருக்கும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றுகளை வழங்கினார்.இந்த வெற்றியை ராமநாதபுரம் மாவட்ட திமுகவினர் இனிப்புகள் வழங்கியும்,பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.
'அதிர்ச்சியில் அதிமுகவினர்'
ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகளையும் கைப்பற்றுவோம் என சூளுரைத்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்ட கட்சியினர், இதனால் வாக்குப்பதிவு நடைபெறும் முன்பே இரண்டு வார்டுகள் தங்கள் கையை விட்டுப் போனதால், அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
இதனால், மீதியுள்ள 31 ல் பதவியை கைப்பற்ற 143 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ராமநாதபுரம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் 17 பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 33 வார்டுகளில் 197 பேர் மனுதாக்கல் செய்தனர். நேற்று 49 வேட்பாளர்கள் தங்களது மனுவை வாபஸ் பெற்றுள்ளனர். வார்டு 7, 29ல் போட்டியின்றி இரண்டுபேர் தேர்வாகியுள்ளனர். மீதியுள்ள 31 வார்டுகளில் கவுன்சிலர் பதவியை கைப்பற்ற 143 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். இறுதி வேட்பாளர் பெயர், ஒதுக்கப்பட்டுஉள்ள சின்னம் பட்டியல்நகராட்சி அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும் என தேர்தல் அதிகாரிகள் கூறினர்.