பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் ரூ. 4 கோடிக்கு ஆடுகள் விற்பனை
அதிகபட்சமாக ஒரு ஆட்டுக்கிடா ரூபாய் 65 ஆயிரம் வரையிலும் குறைந்தபட்சம் ஒரு கிடா பத்து முதல் 15000 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
நெல்லை மேலப்பாளையத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். குறிப்பாக மாவட்டத்தின் புகழ்பெற்ற ஆட்டுச் சந்தையாக மேலப்பாளையம் ஆட்டுச் சந்தை விளங்குகிறது. குறிப்பாக ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, பொங்கல் என பண்டிகை நாட்களில் சந்தையில் வியாபாரமானது களைகட்டும், நெல்லை மாவட்டத்தில் மட்டுமல்லாது மற்ற மாவட்டங்களிலும் இருந்தும் விற்பனைக்காக கால்நடைகளை கொண்டு வந்து விற்பனை செய்வர். இந்த நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் பொங்கல் பண்டிகை வரவுள்ளது. மேலும் பொங்கல் பண்டிகைக்கு மறு நாள் கரி நாள் தென்மாவட்டங்களில் கொண்டாடப்படுகிறது. இதற்காக அசைவ பிரியர்கள் இறைச்சிகளை வாங்குவார்கள். இதனை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் ஆடு விற்பனையானது இன்று களைகட்டி உள்ளது.
பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாட உள்ள நிலையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் ஆடு வாங்குவதற்கு மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் குவிந்தனர். சந்தைக்கு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி சுற்றுவட்டார பகுதி கால்நடை விவசாயிகள் மட்டுமின்றி விழுப்புரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆடு வளர்ப்போர் மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக ஆந்திர மாநிலத்திலிருந்து வரப்பெற்றுள்ள செம்மரி கிடாய்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் நெல்லை ஆட்டு சந்தையில் செம்மறி வகையான பொட்டு குட்டி செங்குட்டி, மகிழம்பாடி உள்ளிட்ட ஆடு வகைகளும், வெள்ளாட்டு வகையில் கருப்பு கிடா, கொடியாடு , பல்லையாடு உள்ளிட்ட வகைகளும் விற்பனைக்கு அதிக அளவில் வந்துள்ளது. இதனால் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
அதிகாலை தொடங்கிய ஆட்டுச் சந்தையில் தற்போது வரை 4 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகபட்சமாக ஒரு ஆட்டுக்கிடா ரூபாய் 65 ஆயிரம் வரையிலும் குறைந்தபட்சம் ஒரு கிடா பத்து முதல் 15000 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதுவதுடன் ஆடுகள் விற்பனையும் களைகட்டியுள்ளது.