ஒரு நாளும் நடக்காது; யாராலும் உங்களை காலி செய்ய முடியாது - மாஞ்சோலை மக்களை சந்தித்த கிருஷ்ணசாமி
"மாஞ்சோலை விவகாரத்தில் சட்டரீதியாகவும் பிற போராட்டங்களையும் நடத்துவோம், தொழிலாளர்களை வெளியேற்ற அனுமதிக்க மாட்டோம்"
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்டத்துக்கான குத்தகை காலம் முடிவடைய இருப்பதால் அதை நடத்தி வரும் பிபிடிசி என்ற தனியார் நிறுவனம் தொழிலாளர்களை கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தொழிலாளர்களுக்கு சமீபத்தில் விருப்ப ஓய்வு வழங்கப்பட்டது. மேலும் ஆக.7 ம் தேதிக்குள் அனைவரும் வீடுகளை காலி செய்து விட்டு வெளியேற வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிபிடிசி நிறுவனம் கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வு விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கியதாகவும் இங்கிருந்து கீழே செல்ல தங்களுக்கு விருப்பமில்லை தொடர்ந்து இங்கேயே நாங்கள் வாழ்வதற்கு அரசு வழி செய்ய வேண்டும் என தொடர்ச்சியாக தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் 2028 ஆம் ஆண்டு வரை குத்தகைக் காலம் இருக்கும் நிலையில் முன்கூட்டியே தங்களை கட்டாயப்படுத்தி தனியார் நிறுவனம் கீழே செல்லும்படி வற்புறுத்துவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதையடுத்து அடுத்தடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மாஞ்சோலை சென்று தொழிலாளர்களை சந்தித்து வருகின்றனர். இதற்கிடையில் மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதி செய்து கொடுக்கும் வரை அவர்களை வெளியேற்றக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது போன்ற சூழ்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று மாஞ்சோலை சென்று தேயிலை தொட்ட தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் முதலில் அவர் மாஞ்சோலையில் வசிக்கும் தொழிலாளர்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து நாலுமுக்குவில் வைத்து ஊத்து காக்காச்சி நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் வசிக்கும் தேயிலைத் தொட்ட தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டார்.
அப்போது பேசிய தொழிலாளர்கள் "பிபிடிசி நிறுவனம் தங்களை ஏமாற்றி விருப்ப ஓய்வில் கையெழுத்து வாங்கி விட்டது. எங்களை ஒன்று சேர விடாமல் பிரித்து சூழ்ச்சி செய்து விட்டது. எங்களுக்கு கீழே வாழ்வாதாரம் கிடையாது. எனவே ஒரு கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும் அல்லது எங்களுக்கு இங்கே விவசாயம் செய்ய ஐந்து ஏக்கர் நிலம் தர வேண்டும் அல்லது தமிழக அரசு தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்த வேண்டும்" என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அப்போது தொழிலாளர்கள் மத்தியில் பேசிய கிருஷ்ணசாமி "1998ல் புதிய தமிழகம் நடத்திய போராட்டத்திற்கு பிறகு தான் மாஞ்சோலை உட்பட அனைத்து தேயிலை தோட்டத்து தொழிலாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. தற்போது தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு வந்துள்ளது. கடந்த 15 நாட்களாக வேலையும் கொடுக்காமல் பட்டினி போட்டுள்ளனர். இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பிபிடிசி நிறுவனத்தின் குத்தகை காலம் முடிந்தால் அவர்கள் வேண்டுமென்றால் இங்கிருந்து வெளியேறட்டும். தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் என யாரும் கூற முடியாது. யாராலும் உங்களை காலி செய்ய முடியாது. அதற்கு புதிய தமிழகம் உறுதுணையாக இருக்கும், நீங்களும் உறுதியாக இருக்க வேண்டும். நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். தொழிலாளர்களை வெளியேற்ற அனுமதிக்க மாட்டோம்" என பேசினார்.
அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பிபி டிசி நிர்வாகம் கட்டாயப்படுத்தி தொழிலாளை வெளியேற்ற முயற்சிக்கிறது. தற்போது தொழிலாளர்கள் இக்கட்டான சூழலில் இருக்கின்றார்கள். தேவைப்பட்டால் மாஞ்சோலை விவகாரத்தில் சட்டரீதியாகவும் பிற போராட்டங்களையும் நடத்துவோம். தொழிலாளர்களை வெளியேற்ற அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்