சென்னைக்கு வாய்ப்பில்லை.. தென்மாவட்டங்களில் 50 செ.மீ மழைக்கு வாய்ப்பு - வெதர்மேன் ரிப்போர்ட்
ஏற்கனவே அதிகப்படியான மழை வெள்ளம் மற்றும் மோசமான வானிலை காராணமாக தூத்துக்குடி விமான நிலையத்தில் தரையிறக்கப்படவேண்டிய விமானங்கள் மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
தென் தமிழ்நாடு முழுவதும் மழை வெள்ளத்தால் ஸ்தம்பித்து வரும் நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இந்த மழை குறித்து கூறியுள்ளதாவது, தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களில் 50 செ.மீட்டர் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் தென் மாவட்டங்களைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். அதேபோல் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மழை தொடர்ந்து பொழியும் என்பதால் மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும், நேற்றில் இருந்து மழை பெய்து வருவதால் மின்சாரம் தடைபட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக தென் மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை அதாவது டிசம்பர் 18ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துகுடி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையை அந்ததந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்தது. இதனால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகங்கள் அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
கனமழை காரணமாக திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் எப்போது மீண்டும் நடத்தப்படும் என்ற அறிவிப்பினை பல்கலைக் கழகம் மீண்டும் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பொது மக்களுக்கான அறிவுரை
- தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிருவாகத்தின் அறிவுரையின் முகாம்களுக்கு செல்ல வேண்டும் பேரில் முன்கூட்டியே நிவாரண
- முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
- நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
- ஆபத்தான இடங்களிலும், நீர்நிலைகளுக்கு அருகிலும் தன்படம் (செல் ஃபி) எடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
- அறுந்து கிடக்கும் மின் கம்பிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்
- அவசர உதவிக்கு பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்
- மாநில அவசரகால செயல்பாட்டு மையம் -1070
- வாட்ஸ் அப் எண். - 94458 69848
- மாவட்ட அவரகால செயல்பாட்டு மையம் - 1077