Tirunelveli: நண்பர்களுடன் ஜாலி ட்ரிப்.. எதிர்பாராத விபத்தால் நேர்ந்த சோகம்..! இருவர் உயிரிழப்பு!
நண்பர்களுடன் விடுமுறையை கொண்டாட சுற்றுலா வந்த இடத்தில் கார் விபத்திற்குள்ளாகி இருவர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதியினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஏர்வாடி அருகே தர்கா பகுதியை சேர்ந்தவர் ஆசிப் அலி மகன் சேக்அப்துல்லா (24). இவர் வாரவிடுமுறையை முன்னிட்டு அப்பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மூன்று கார்களில் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாவிற்கு சென்றுள்ளனர். அங்கிருந்து வரும் வழியில் குற்றாலம் செல்வதற்கு திட்டமிட்டு திருவனந்தபுரத்திலிருந்து காரில் சென்று கொண்டிருந்தனர். இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர், அப்போது அங்கு ஏற்கனவே பழுதான லாரி ஒன்று நின்றுக் கொண்டிருந்தது. அதே நேரம் பின்னால் வந்துக்கொண்டிருந்த ஷேக் அப்துல்லா ஓட்டி வந்த கார் திடீரென நிலை தடுமாறி அந்த லாரியின் மீது மோதியது. இதில் ஷேக்அப்துல்லா மற்றும் அமீர் அப்பாஸ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் அதே காரில் வந்த அகமதுபாஷா, ஆசிம்கான் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நாங்குநேரி போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்த இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அங்கு போதிய டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லை எனக்கூறி இரு உடல்களும் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து நாங்குநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக அதிகாலை நேரம் என்பதால் கார் ஓட்டும் நபர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் விடுமுறையை கொண்டாட சுற்றுலா வந்த இடத்தில் கார் விபத்திற்குள்ளாகி இருவர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதியினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்