(Source: ECI/ABP News/ABP Majha)
நெல்லை - திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சாலையில் தனிபாதை அமைக்க பரிசீலிக்கப்படும் - அமைச்சர் எ.வ. வேலு
இந்த செயலியில் பொதுமக்கள் நேரடியாக புகார் அளித்தால் அதன் மூலம் கிடைத்த தகவல் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதியிலும் பழுதடைந்த சாலைகள் சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சாலை பாதுகாப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணிகள் துறை அமைச்சர் எ.வ. வேலு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மனோதங்கராஜ் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துதுறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், தன்னார்வலர்கள் பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ. வேலு கூறும்பொழுது, “திருநெல்வேலி - தென்காசி சாலை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவடையும். ஒப்பந்தகாரரை அழைத்து பணிகள் குறித்து பேசி விரைந்து நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தபட்டுள்ளது. பாவூர்சத்திரம் அருகே ரயில்வே பாலம் கட்டப்படுகிறது. திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் சாலை பணிகளும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு பெறும். சென்னை - மாமல்லபுரம் ஈ.சி.ஆர் சாலை 2005 ல் நில எடுப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட 2020 வரை கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் அந்த நில எடுப்பு பணியை மேற்கொள்ள முடிவு செய்தால் அதற்கான தொகை 900 கோடி அதிகரித்து விட்டது.10 ஆண்டுகளில் சாலை பணிகளுக்கு நில எடுப்புக்கு என எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் சுங்க சாவடிகளை அப்புறபடுத்த வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. மாநில நெடுஞ்சாலையில் 7 மீட்டர் எடுத்து 14 இடங்களில் சுங்க சாவடி அமைத்து வசூல் செய்து வருகின்றனர். இதனை அகற்ற மத்திய அரசிடம் பல முறை வலியுறுத்தி வருகிறோம். சட்டமன்றத்திலும் இது குறித்து பேசியுள்ளேன், ஆனால் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என ஒன்றிய அரசு சொல்கிறதே தவிர அதற்கு வழி காணவில்லை. மாநில நெடுஞ்சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை தடுக்க ஜூன் மாதம் புதிய செயலியை தொடங்க இருக்கிறோம்.
இந்த செயலியில் பொதுமக்கள் நேரடியாக புகார் அளித்தால் அதன் மூலம் கிடைத்த தகவல் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதியிலும் பழுதடைந்த சாலைகள் சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆசியாவிலேயே முதல் ஈரடுக்கு மேம்பாலமாக நெல்லை பாலம் அமைந்துள்ளது. தற்போது பரமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. 50 ஆண்டுகளை கடந்து பொன் விழா கொண்டாடப்படும் பாலம் அந்த பாலம். மாநில நெடுஞ்சலைகள் தரமானதாக அமைக்கப்பட்டு வருகிறது. எனது வாகனத்திலேயே சோதனை செய்யும் கருவியுடன் தான் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். திடீர் திடீரென ஆய்வு செய்து வருகிறேன். வரும் காலங்களில் சாலை தரமானதாக தமிழ் நாட்டில் இருக்கும் என்றார். தொடர்ந்து திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் வசதிக்காக தனி பாதை அமைக்க பரிசீலிக்கப்படும். அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு திட்ட மதிப்பீடு தயார் செய்து முதலமைச்சரின் அனுமதியோடு அடுத்த ஆண்டில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்” என தெரிவித்தார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்