பற்களை பிடுங்கிய விவகாரத்தில் புகார் கூறிய நபர் திடீர் பல்டி - விசாரணையில் நடப்பது என்ன?
புகார் தெரிவித்த நபர் திடீரென அந்தர் பல்டி அடித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளரான பல்வீர் சிங் சின்ன சின்ன குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களின் பற்களை பிடுங்கியும், வாயில் ஜல்லி கற்களை போட்டும் கொடூரமான தண்டனை வழங்கி வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பேட்டி அளித்தனர். இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்படி விசாரணை அதிகாரியான சேரன்மகாதேவி உதவி ஆட்சியர் முகமது சபீர் ஆலம் நேற்று விசாரணை துவக்கினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை லட்சுமி சங்கர் என்பவர் மட்டும் ஆஜரானார். ஒரு மணி நேரத்திற்கும் மேல் விசாரணையானது நடைபெற்றது. விசாரணையில் அவர் ஏஎஸ்பி தாக்குதலில் தான் காயம் அடையவில்லை என்றும் அவர் தவறிழைக்கவில்லை எனவும் விளக்கம் அளித்ததாக தெரிகிறது. மேலும் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கை கட்டாய காத்திருப்பர் பட்டியலுக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதே போல விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் விசாரணை நடத்தி 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. மேலும் இந்த விவகாரத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். இது தொடர்பாக நடைபெறும் விசாரணையில் முழுமையான அறிக்கை வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காவல் நிலையங்களில் நடைபெறும் மனித உரிமை மீறல்களில் எந்த சமரசமும் அரசு மேற்கொள்ளாது எனவும் தெரிவித்தார்.
இந்த சூழலில் நேற்று மீண்டும் விசாரணையானது மாலை துவங்கியது. அப்போது சூர்யா என்ற நபர் விசாரணைக்கு ஆஜரானார். விசாரணை முடிந்து வெளியே வந்த நபரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது விசாரணைக்காக அழைத்தனர் அதனால் வந்தேன் என்றார். பல் பிடுங்கியதாக கூறப்படுவது குறித்து கேட்டதற்கு, கீழே விழுந்து தான் பல் விழுந்தது. காவல்துறை தாக்குதல் அப்படி எதுவும் இல்லை என்று தெரிவித்தார். புகார் தெரிவித்த நபர் திடீரென அந்தர் பல்டி அடித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சேரன்மகாதேவி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரின் பற்கள் பரிசோதிக்கப்பட்டு அதற்கான அறிக்கையையும் உதவி ஆட்சியர் பெற்றுக் கொண்டார். இதனை அடுத்து கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் சம்பவத்தின் போது பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ஆபிரகாம், இரண்டு பெண் காவலர்கள் உள்ளிட்ட நான்கு பேர் விசாரணைக்கு ஆஜராகினர் அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
மாலையில் சம்மன் அனுப்பப்பட்ட சுபாஷ் உள்ளிட்ட ஆறு பேர் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை நேரடியாக வந்து விசாரணை அதிகாரிடம் தெரிவிக்க வந்திருந்தனர். சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த அவர்களை 3 மணி நேரமாக காக்க வைத்த உதவி ஆட்சியர் அவர்களிடம் விசாரணை நடத்தவில்லை. மாறாக சம்மன் அனுப்பப்பட்ட சுபாஷை மட்டுமே தான் விசாரிக்க முடியும் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மற்ற நபர்களை விசாரிக்க வேண்டுமெனில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்து அவர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே விசாரிக்க முடியும் என உதவி ஆட்சியர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் நேரடியாக வந்து தகவல்களை தெரிவிக்கலாம் என காலையில் தெரிவித்திருந்த உதவிஆட்சியர் மாலையில் விசாரிக்க மறுத்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. ஏற்கனவே காவல்துறையினர் சாட்சிகளை விலைக்கு வாங்கி அவர்களை பிறழ் சாட்சிகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் ஆட்சியர் செயல்படுகிறாரோ என எண்ண தோன்றுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் வழக்கறிஞர் மகாராஜன் கூறும்போது, “இந்த விஷயத்தில் காலையில் யார் வேண்டுமானாலும் வந்து ஆஜராகலாம் என சார் ஆட்சியர் தெரிவித்துப் பிறகு தற்போது சம்மன் இருந்தால் மட்டுமே ஆஜராக வேண்டும் என தெரிவிப்பது எந்த விதத்தில் நியாயம். அப்படி என்றால் ஏ எஸ் பி க்கு ஆதரவாக காலையில் சூர்யா என்பவர் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். அவருக்கு இதுவரை சம்மன் அனுப்பப்படவில்லை. அவர் மட்டும் எப்படி வந்து இங்கு ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். ஏற்கனவே சார் ஆட்சியர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்திருந்தோம். மீண்டும் சொல்கிறோம், இவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இழந்து விட்டது. ஆகவே மாவட்ட ஆட்சித் தலைவரோ அல்லது ஓய்வு பெற்ற நீதிபதியையோ கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்படி விசாரணை நடத்தினால் மட்டும் தான் நிியாயம் கிடைக்கும். இல்லை என்றால் நியாயம் கிடைக்காது. காலையில் ஒரு பேச்சைப் பேசிய சார் ஆட்சியர் மாலையில் வேற மாதிரி பேசுவது அவருக்கு எங்கே இருந்து அழுத்தம் வந்தது. தமிழக சட்டசபையில் தமிழக முதலமைச்சர் இந்த சம்பவம் தொடர்பாக ஏ எஸ் பி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். சஸ்பெண்ட் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது இந்த விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை” என தெரிவித்தார்.