நெல்லை திமுக தோல்வியடைந்தால் பதவிகள் பறிப்பு! ஸ்டாலின் எச்சரிக்கை: 2026 தேர்தலில் பரபரப்பு!
நெல்லை சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெறத் தவறினால், மாவட்டச் செயலாளர்கள் உட்பட அனைத்து நிர்வாகிகளின் பதவிகளும் பறிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நெல்லை சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெறத் தவறினால், மாவட்டச் செயலாளர்கள் உட்பட அனைத்து நிர்வாகிகளின் பதவிகளும் பறிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் விதமாக, தி.மு.க. தலைமை கடந்த சில மாதங்களாகத் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் சட்டமன்றத் தொகுதி வாரியாக, மாவட்டச் செயலாளர்கள் முதல் கிளைக் கழகச் செயலாளர்கள் வரை அனைவரையும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தனித்தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதுவரை 33 நாட்களில் 73 சட்டமன்றத் தொகுதிகளின் நிர்வாகிகளுடன் அவர் one to one ஆலோசனையை நிறைவு செய்துள்ளார்.இந்தச் சந்திப்புகளின்போது, தொகுதிகளில் நிலவும் கள நிலவரம், வெற்றி வாய்ப்புகள், அரசுத் திட்டங்கள் மக்களைச் சென்றடைந்த விதம், உட்கட்சிப் பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் நேரடியாகக் கேட்டறிந்து வருகிறார்.
இந்தச் சூழலில், இன்று திருநெல்வேலி மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் one to one ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போதுதான் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி தொகுதி நிர்வாகிகளுக்குக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்தார்.திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் தற்போது பா.ஜ.க. மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். (2021 தேர்தலில் இவர் வெற்றி பெற்றார்). வரவிருக்கும் 2026 தேர்தலில், நயினார் நாகேந்திரன் மீண்டும் இங்கேயே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அத்தொகுதியில் தி.மு.க. கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
2026 தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் தி.மு.க.வுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றால், மாவட்டச் செயலாளர் உட்பட அனைத்து நிர்வாகிகளின் பதவிகளும் பறிக்கப்படும் என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உட்கட்சிப் பூசல்களை மறந்து, வெற்றிக்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதற்காக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க. மாநிலத் தலைவரே மீண்டும் வெற்றி பெற்றால், அது தமிழகத்தில் பா.ஜ.க.வுக்குக் கூடுதல் பலம் சேர்க்கும். மேலும், அவர் சட்டமன்றக் குழுத் தலைவராக ஆக வாய்ப்பு இருப்பதால், அது ஆளுங்கட்சியான தி.மு.க.வுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும். இதனைத் தடுக்கும் நோக்கில், நெல்லைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோதே, நெல்லை தொகுதியில் லட்சுமணன் என்ற தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றி பெற்றிருந்தார். ஆளுங்கட்சியாக இருக்கும்போது, அந்த வெற்றியை ஏன் தக்கவைக்க முடியவில்லை என்று ஸ்டாலின் ஏற்கனவே நிர்வாகிகளிடம் கேட்டறிந்து வந்தார். மொத்தத்தில், நயினார் நாகேந்திரனின் கோட்டையை உடைத்து, தெற்கில் கட்சியை வலுப்படுத்த தி.மு.க.வின் உயர்மட்டத் தலைமை நேரடியாகக் களமிறங்கியுள்ளது. மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து தீவிரப் பணிகளை மேற்கொண்டு, நெல்லை தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டளையை மு.க.ஸ்டாலின் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.





















