என்னாது ராமநாதபுரத்துல பூங்கா இருக்கா' 'அங்க வண்டிய நிறுத்த இவ்வளவு காசா - மக்கள் வரவேற்பை பெறாத ஐந்திணை பூங்கா
’’பூங்கா குறித்த விளம்பரங்கள் குறைவாகவும் பூங்காவுக்கு நுழைவுக்கட்டணம் அதிகமாகவும் இருப்பதால் மக்களின் வரவேற்பை பெறவில்லை’’
ராமநாதபுரம் அருகே கூடுதல் நுழைவுக் கட்டணம் காரணமாகவும், பூங்கா குறித்த விளம்பரமில்லாத காரணத்தாலும் ராமநாதபுரம் அருகே ஐந்திணை மரபணு பூங்கா பார்வையாளர்களின்றி வெறிச்சோடிக்கிடக்கிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக பாரம்பரியத்தை இளைய தலைமுறைக்கு விளக்கும் வகையில் ஐந்திணை மரபணுப் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி குறிஞ்சிப் பூங்கா சேலம் ஏற்காட்டிலும், முல்லைப் பூங்கா திண்டுக்கல் சிறுமலையிலும், நெய்தல் பூங்கா நாகப்பட்டினம் திருக்கடையூரிலும், மருதம் பூங்கா தஞ்சாவூரிலும், பாலைப் பூங்கா ராமநாதபுரம் மாவட்டம் அச்சரபிரம்பு பகுதியிலும் அமைக்கப்பட்டன.குறிஞ்சி தொடங்கி மருதம் வரையிலான பூங்காக்கள் 2012 ஆம் ஆண்டே திறக்கப்பட்ட நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் அச்சபிரம்பில் உள்ள பாலைப் பூங்கா மட்டும் கடந்த 2015 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, அடுத்த ஆண்டே அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை, தூத்துக்குடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் திருப்புல்லாணிக்கு முன்பாக அச்சப்பிரம்பு பகுதியில் இடதுபுறம் சுமார் 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, அதில் 10 ஏக்கரில் .ரூ.7.35 கோடி செலவில் இப்பூங்கா அமைந்துள்ளது. பூங்காவில் காட்டு ரோஜா உள்ளிட்ட அரிய மலர்கள், கூந்தல் பனை உள்ளிட்ட தமிழக பாரம்பரிய மரங்கள், கற்றாழை உள்ளிட்ட வறட்சிப் பகுதி தாவரங்கள், பாலை நிலத்தை நினைவூட்டும் மணல் மேடுகள், ஓலையால் ஆன குடில்கள், குகை கட்டடம், யானை,மான் போன்ற விலங்கின சிலைகள், சிறுவர்கள் விளையாடும் பகுதி ஆகியவை அமைக்கப்பட்டன.
இதன் மூலம் ராமநாதபுரத்தில் எந்தவித பொழுது போக்கு அம்சங்களோ, பூங்காக்களோ இல்லாத குறையை இந்த பூங்கா போக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஐந்திணை மரபணு பூங்காவில் பாலை நிலத்திற்கான அடையாளங்களான கற்றாழை உள்ளிட்ட பாலை நில மரங்கள், அழகான புல்வெளிகள், மணல் குன்றுகள், பாலைவனச்சோலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் ரசித்து மகிழும் வகையில் அழகான நடைபாதைகள், சுரங்க பாதைகள், விலங்குகளின் சிற்பங்கள, கூட்ட அரங்க மேடை, அரிய வகைப்பூச்செடிகள் மற்றும் அலங்காரச் செடிகள், மரங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. ஓய்விற்கு நிழற்கூடாரங்கள் உள்ளன. கேன் டீன் வசதி, கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. பூங்கா காலை 8.30 மணி முதல் இரவு 8.30 வரை திறந்திருக்கும்.இப்பூங்காவைப் பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.15, சிறுவர்களுக்கு ரூ.10, அரசுப் பள்ளி மாணவர் எனில் ரூ.2 எனவும், தொலைக்காட்சி நாடகம், திரைப்படங்களின் படப்பிடிப்புக்கும் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. வாகனம் நிறுத்த, பேருந்துகளுக்கு ரூ.100, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.15, கேமராவுக்கு ரூ.25, விடியோ கேமராவுக்கு ரூ.50 எனவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கண்டுகளிக்க அனைத்து பொழுது போக்கு அம்சங்களும் உள்ளது. ஆனால் இத்தனை பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு பூங்கா ராமநாதபுரம் அருகே இருப்பது உள்ளூர் மக்களுக்கே இன்னும் தெரியாத நிலையில் பொதுமக்களும், சுற்றுலாப்பயணிகளும் வருகை இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறது. கிழக்கு கடற்கரையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் சென்றும் இப்பூங்காவை ரசிக்க வருவதில்லை. அரசு, பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில்விளம்பரப்படுத்த வேண்டும். இங்கு நிர்ணயிக்கப்பட் நுழைவுக் கட்டணம், வாகன நிறுத்தக் கட்டணம் கூடுதலாக உள்ளதாகவும், பொது மக்களும் சுற்றுலாப் பயணிகளும் கருதுகின்றனர்.
நுழைவுக் கட்டணம், வாகன நிறுத்தக் கட்டணத்தை கேட்டதும், சிலர் பூங்காவிற்குள் நுழையாமல் சென்று விடுகின்றனர். மேலும் கிழக்கு கடற்கரை சாலையின் பல இடங்களில், மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை, ராமேஸ்வரம், ஏர்வாடி போன்ற ஊர்களில் இப்பூங்கா குறித்த விளக்க விளம்பர போர்ட்டுகள் வைக்காததால் பொதுக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பூங்கா பற்றி தெரிந்து கொள்ள முடியவில்லை எனவும் புகார் கூறப்படுகிறது. எனவே, அரசு இந்த பூங்கா குறித்த விளம்பரத்தையும் விழிப்புணர்வையும் மக்களிடையே கொண்டு போய்ச் சேர்த்து, நுழைவு கட்டணம், வாகன நிறுத்தும் கட்டணம் உள்ளிட்டவைகளை குறைத்து பூங்காவிற்கு அனைத்து தரப்பினரும் வந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.