கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் இன்னும் அதிகமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - கனிமொழி எம்பி
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தீ விபத்தில் சேதமடைந்த வாழைகள் கணக்கிடப்பட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்-கனிமொழி எம்பி.
தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தமிழக அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பாரம்பரிய ரகங்களின் சாகுபடி - விற்பனை வாய்ப்புகள் மற்றும் பாரம்பரிய உணவு வகைகள் குறித்த வேளாண்மை கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார். ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி உதவி ஆட்சியர் கவுரவ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசும்போது, கண்காட்சியில் சிறுதானியங்கள், பாரம்பரிய நெல் வகைகள் இடம் பெற்றுள்ளன. பாரம்பரிய நெல் வகைகளில் ஆராய்ச்சி செய்து அதை இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றவாறு மாற்றம் செய்ய வேண்டும். பாரம்பரிய நெல் வகைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். குறைந்த காலத்தில் குறைந்த தண்ணீரில் விளையக்கூடிய பாரம்பரிய நெல் வகைகள் குறித்து ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் விரைவில் வெற்றி பெறுவோம். தொடர்ந்து ஆராய்ச்சி செய்வது என்பது மிகவும் முக்கியமான, இன்றியமையாத ஒன்றாகும். நீரழிவு வந்தவுடன் அரிசி உணவை நிறுத்திவிட்டு, சப்பாத்தி சாப்பிட வேண்டும் என்று கூறும் நிலை இருந்தது. ஆனால் இப்போது நம்முடைய பாரம்பரிய உணவு வகைகள் தான் நீரழிவு நோயினை கட்டுப்படுத்துவதற்கு சிறந்தது என்று மருத்துவர்கள் கூறுகிறர்கள். சோளம், வரகு, கம்பு, ராகி உள்ளிட்ட உணவு வகைகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நமது பாரம்பரிய சிறுதானியங்களை விளைவிக்க அதிக தண்ணீர் மற்றும் அதிக நாட்கள் தேவைப்படாது. உலகம் முழுவதும் தற்போது சிறுதானியங்களை அதிகம் வாங்குகிறார்கள். பழமையான விசயங்களின் சிறப்பினை உணர்ந்து அதை இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப மாற்றுவது தான் ஆராய்ச்சி மையத்தின் முதல் கடமையாகும். கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் இன்னும் அதிகமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் மாணவர்களுக்கு புதுமையான விசயங்களையும் கற்றுக்கொடுக்க வேண்டும். சந்திராயன் திட்டம் வெற்றி பெற்றபோது அந்த திட்டத்தின் இயக்குநர் தமிழ்நாட்டை சேந்தவர் என்பது நமக்கு பெருமையாக இருக்கிறது. அதேபோல் இங்கு இருக்கும் மாணவர்களும் மிகப்பெரிய விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும். சாத்தான்குளம் பகுதியில் வறட்சியினால் பாதிக்கப்படும் பனை மரங்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்படும். மேலும் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தீ விபத்தில் சேதமடைந்த வாழைகள் கணக்கிடப்பட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) பாலசுப்பிரமணியன், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் தேரடிமணி, பனை ஆராய்ச்சி மைய சிறப்பு அலுவலர் சுவா்ணபிரியா, வேளாண்மை துணை இயக்குநர் மனோரஞ்சிதம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்ட்டின்ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.