தனியாருக்கு விமான நிலையங்களை கொடுப்பது தவறே கிடையாது - நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ
கடந்த 10 ஆண்டுகளாக 4 வழிச்சாலை, உள்ளிட்ட போக்குவரத்து வசதியை, உட் கட்டமைப்பு வசதிகளை பாரத பிரதமர் மேம்படுத்தி உள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டை வஉசி உள் விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான இறகு பந்து போட்டி நடைபெற்றது. இதனை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளது என்பது குறித்து கேட்டதற்கு, அது அவர்களின் உட்கட்சி விவகாரம். அவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் அமைச்சர் பதவி கொடுக்கலாம். அப்படி கொடுப்பதில் எந்த தவறும் இல்லை, ஆனால் அந்த பதவியை வைத்துக்கொண்டு நல்ல முறையில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஒவ்வொருத்தருக்கும் மந்திரி பதவி கொடுத்த பின்னே அவர்கள் தகுதி திறமையை வெளிப்படுத்த முடியும். உதயநிதிக்கு பதவி கொடுத்து ஒரிரூ மாதம் கழித்து தான் இதற்கு பதில் சொல்ல முடியும் என்றார். அதிமுகவின் கூட்டணி குறித்து கேட்டதற்கு, அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார். இதுவரை இந்தியாவிற்கு எத்தனையோ பிரதமர் வந்திருக்கின்றனர். ஆனால் யாருமே தமிழ் நாட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. ஒரு நாடு வளர்ச்சியடைய அந்த நாட்டின் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாக 4 வழிச்சாலை, உள்ளிட்ட போக்குவரத்து வசதியை, உட் கட்டமைப்பு வசதிகளை பாரத பிரதமர் மேம்படுத்தி உள்ளார். இதனால் பல தொழில்கள் மேம்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். நாடு முழுவதும் 130 விமான நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் தனியாருக்கு நிர்வாகத்திற்கு விடப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தனியாருக்கு விமான நிலையங்களை கொடுப்பது தவறே கிடையாது, அரசாங்கம் தொழில் செய்யக்கூடாது. அரசாங்கம் தொழில் செய்தால் அதில் லாபம் கிடைக்காது. ஏனென்றால் தனியார் வேலையாட்களை குறைவாக வைத்துக் கொள்ளும். அதே அரசாங்கத்தில் வேலையாட்கள் அதிகம். அதனால் அரசாங்கம் எந்த தொழில் செய்தாலும் நஷ்டத்தில் தான் முடியும். தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை வைத்துக்கொண்டு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்று தெரிவித்தார்.
ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் இப்போது கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கலந்து கொள்ளவில்லை. ஒரு மாதம் கழித்து ராமர் கோவிலுக்கு செல்வோம் என்று தெரிவித்தார். பிரதமர் மோடி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதில் அவர் பிரதமராக கலந்து கொள்கிறார். அதில் தவறு ஏதுமில்லை. ஆகம விதிகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடுகிறது என்று மழுப்பலான பதில் அளித்தார். தமிழகத்தில் ஆகம விதிகள் ஒரு மாதிரியும், கேரளாவில் வேறு மாதிரியும் வட மாநிலங்களில் மற்றொரு மாதிரியும் ஆகம விதிகள் உள்ளது என மந்திரங்களை உச்சரித்தபடி அவர் தெரிவித்தார்.
மாநகராட்சியில் ஆளுங்கட்சியினர் ஒட்டுமொத்தமாக உள்ளனர். என்னை பொறுத்தவரை அது தவறான செயல், கவுன்சிலராக இருந்தாலும் சரி, மேயரானாலும் சரி மக்களின் நலன்கள் பாதிக்கக்கூடாது. அவர்கள் மக்கள் நலனுக்கு சேவை செய்ய வேண்டும் என மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர், சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் நான் எனது கடமை செய்கிறேன், அதே போல மாநகராட்சி உறுப்பினர்களாக அவர்கள் கடமையை செய்ய வேண்டும் என்றார். கவுன்சிலர்கள், மேயரிடையே உள்ள மோதலை தலைமையால் கட்டுப்படுத்த முடியாத நிலை இருப்பதாக தான் சொல்லமுடியும். முதலமைச்சர் நேரில் தலையிட்டு இது போன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்