தமிழகத்தில் குடிநீர்தட்டுப்பாட்டை கண்டறிந்து 2 ஆண்டிற்குள் அரசு நடவடிக்கை எடுக்கும் -அமைச்சர் கே.என்.நேரு
நெல்லை மாவட்டத்திற்கு மட்டும் திட்டப்பணிகளுக்காக நகராட்சி துறை சார்பில் 2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சி பகுதிகளில் புதிய பாதாள சாக்கடை திட்ட பகுதி 3 முறப்பநாடு குடிநீர் திட்ட பணிகள் உள்ளிட்ட 687.35 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவிழா மற்றும் 124.77 கோடி மதிப்பீட்டிலான சீர்மிகு நகரத் திட்டம், கல்வி உள்ளிட்ட பல்வேறு நிதியின் கீழ் முடிவுற்ற பணிகளின் தொடக்கவிழா நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் கே.என்.நேரு, நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் முதலாவதாக சாந்திநகர் பகுதியில் முறப்பநாடு கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் பகுதி 3- வது பாதாளசாக்கடைத் திட்டம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு 127.77 கோடி மதிப்பில் சீர்மிகு நகரத்திட்டம் உள்ளிட்ட முடிவடைந்த பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், "மாநரட்சிக்கு இன்றைய தினம் ஒரு பொன் நாள். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தின் குடிநீர் ஆதரங்களை அமைச்சர் நேரு ஆய்வு நடத்தியதன் அடிப்படையில் முறப்பநாடு திட்டம் அடிக்கல் நாட்டப்படுகிறது. முதல்வர் நெல்லை பகுதியில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார். உதாரணமாக நான் தொழில்துறை அமைச்சராக இருந்த போது தான் கங்கை கொண்டானில் டாடா நிறுவனத்தின் மிகப்பெரிய தொழிற்சாலை வந்தது. அதே போல நெல்லையில் மிகப்பெரிய தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட இருக்கிறது. அதற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் நெல்லையை மையமாக வைத்து நாட்டுமக்களுக்கு எதிர்கால சந்ததிகளுக்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் பல திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார்" என தெரிவித்தார்.
தொடர்ந்து அமைச்சர் நேரு பேசுகையில், "திமுக பொறுப்பேற்று இரண்டாண்டு காலத்தில் ஏராளமான கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நகர்புறத்தில் மட்டும் 682 கோடியில் பணிகள் நடந்து வருகிறது. 350 கோடி திட்டமதிப்பிலான பணிகளில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று 687 கோடியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்திற்கு மட்டும் திட்டப்பணிகளுக்காக நகராட்சி துறை சார்பில் 2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே நகரங்கள் வளர வேண்டும் என்பதே முதல்வரின் நோக்கம். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 48% மக்கள் நகரத்தில் இருந்தனர். அதன்பின் கணக்கெடுப்பு எடுக்கவில்லை, இப்போது 60% மக்கள் நகர்ப்புறத்தில் உள்ளனர். அவர்களுக்கு தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, வடிகால் வசதி, கழிவறை வசதி என அதற்காக முதல்வர் நிதி ஒதுக்குவதால் அதற்கான பணிகளை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள மற்ற இடங்களில் எங்கெங்கெல்லாம் குடிநீர் தட்டுப்பாடு இருக்கிறதோ அதனை கண்டறிந்து அங்கு தேவையான நிதிகளை ஒதுக்கி வரும் 2 ஆண்டிற்குள் முழுமையாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் கொண்டு செல்வதற்கான முயற்சியை இந்த அரசு எடுக்கும்" என தெரிவித்தார்