பஞ்சாயத்து பொது நிதியில் ஊராட்சி மன்ற தலைவர் முறைகேடு - மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டு 2 வருடம் ஆகின்றது இன்னும் விசாரணை நிலுவையில் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது - தலைமை நீதிபதி
ஊராட்சி மன்ற பொது நிதியை முறைகேடு செய்ததாக புதுக்கோட்டை, நற்பவளக்கொடி ஊராட்சி மன்ற தலைவர் மணிமொழியன் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து சட்டத்திற்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நற்பவளக்கொடி கிராமத்தைச் சார்ந்த ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், "புதுக்கோட்டை மாவட்டம், நற்பவளக்கொடி ஊராட்சி மன்ற தலைவராக மணிமொழியன் இருந்து வருகிறார்.
இவர் பஞ்சாயத்து பொது நிதியில் முறைகேடு செய்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ஊராட்சி மன்ற பொது நிதியை முறைகேடு செய்த ஊராட்சி மன்ற தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், புகார் குறித்து விசாரணை செய்யப்பட்டது. நடவடிக்கை நிலுவையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், புகார் தெரிவிக்கப்பட்டு 2 வருடம் ஆகின்றது இன்னும் விசாரணை நிலுவையில் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது இனியும் காலம் கடத்தாமல் புகார் குறித்து உடனடியாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து சட்டத்திற்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
மற்றொரு வழக்கு
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அண்ணா சிலைக்கு எதிர் புறம் மீண்டும் ஆட்டோ ரிக்சாக்கள் நிறுத்தினால் வீடியோ காட்சிகளுடன் மனுதாரர் நீதிமன்றத்தை அணுகலாம் - தலைமை நீதிபதி
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அண்ணா சிலைக்கு எதிர் புறம் ஆட்டோ ரிக்ஷா நிறுத்தி வைப்பதை அகற்ற கோரிய வழக்கில், இந்த பகுதியில் போக்குவரத்து காவல்துறையினரை நியமித்து ஆட்டோ ரிக்சாக்கள் நிறுத்தாமல் இருப்பதை கவனிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பி.சி.ராஜன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாக்கல் செய்த பொது நல மனுவில், "திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அண்ணா சிலை எதிரே அரசு இடத்தில் திருநெல்வேலி மாவட்டம் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் ஆட்டோ ரிக்ஷாகள் நிறுத்தி வைப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனை அகற்றக்கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அண்ணா சிலைக்கு எதிர் புறம் ஆட்டோ ரிக்ஷா நிறுத்தி வைப்பதை அகற்ற உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், பழைய பேருந்து நிலையம் இருந்த பகுதி என்பதால் இங்கு ஆட்டோ ரிக்ஷா நிறுத்துமிடம் செயல்பட்டது. தற்போது பேருந்து நிலையம் மாற்றப்பட்டது. இந்த இடம் வாகனம் நிறுத்தக்கூடாது (No Parking) இடமாகும் இதனால் அண்ணா சிலைக்கு எதிரே ஆட்டோ ரிக்ஷா நிறுத்த அனுமதிக்கப்படுவதில்லை மக்களின் வசதிக்காக ஒரு ஆட்டோ ரிக்ஷா மட்டும் நிற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நீதிபதிகள், இந்தப் பகுதி வாகனம் நிறுத்தக்கூடாத (No Parking) பகுதியாகும். மேலும் அதிகமான போக்குவரத்து நெரிசல் இருக்கும் பகுதியாக உள்ளது. எனவே ஒரு ஆட்டோ ரிக்ஷா கூட நிறுத்தக் கூடாது. மேலும் இந்த பகுதியில் போக்குவரத்து காவல்துறையினரை நியமித்து ஆட்டோ ரிக்சாக்கள் நிறுத்தாமல் இருப்பதை கவனிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் இப்பகுதியில் மீண்டும் ஆட்டோ ரிக்சாக்கள் நிறுத்தினால் வீடியோ காட்சிகளுடன் மனுதாரர் நீதிமன்றத்தை அணுகலாம் என கூறி வழக்கை முடித்து வைத்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்