”மின்விளக்கிற்கு 2-ஆம் ஆண்டு நினைவஞ்சலி”: நெல்லையில் சமூக ஆர்வலர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு..
ஒவ்வொரு துறையும் மாறி மாறி தங்களை சுற்ற விடுவதாகவும், இதனால் கடந்த இரண்டு வருடங்களாக மின்விளக்கு எரியாமல் இருப்பதால் நினைவஞ்சலி செலுத்த இருப்பதாகவும் தெரிவித்தார்
திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் எதிரே அமைந்துள்ள பகுதி திருநெல்வேலி மாநகராட்சியின் 36-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியாகும். இங்குள்ள மின் விளக்கு கடந்த இரண்டு வருடங்களாக எரியாமல் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நெல்லை மாநகரத்தின் முக்கிய பகுதியாக விளங்கும் நிலையில் அங்கு மின் எரியாமல் இருப்பதால் அப்பகுதியை கடந்து செல்லும் மக்கள் இரவு நேரங்களில் மிகுந்த சிரமத்தை அனுபவிப்பதாக கூறுகின்றனர்.
மேலும் மின் விளக்கு எரியாமல் இருப்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு துறையினரிடமும் மனு கொடுத்தும் நேரில் சென்று தெரிவித்தும் மின்விளக்கு எரியவில்லை என கூறி சமூக ஆர்வலர் சிராஜ் என்பவர் குற்றம் சாட்டி வந்தார். இந்த நிலையில் அந்த மின் விளக்குக்கு நாளை காலை நினைவு அஞ்சலி செலுத்தப்போவதாக கூறி மின்விளக்கின் அருகே போஸ்டர் ஒன்றையும் ஒட்டியுள்ளார்.
அதில் மின்விளக்கிற்கு இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி என தோற்றம் மறைவு என தேதி மாதம் வருடத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் சென்ற வருடம் இதே நாளில் தன் இன்னுயிரை துறந்து, இன்று வரை ஒளிராமல் வெறும் கூடாக நின்று கொண்டிருக்கும் உம்மை அடுத்த மின்விளக்கு மாற்றப்படும் வரை நினைவு கூறுவோம் என்றும் நீங்கா நினைவுகளுடன் இன்றும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் உன் நண்பர்கள் (மின்விளக்குகள்) என்று எழுதியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இது குறித்து சிராஜ் கூறும்போது, பொதுமக்கள் அதிக அளவில் வந்து போகும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் எதிரே அமைக்கப்பட்டுள்ள இந்த மின்விளக்கு கடந்த இரண்டு வருடங்களாக எரியவில்லை என்றும் இது குறித்து மாநகராட்சியில் புகார் அளித்தால், இது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கீழ் வரும் என்றும் மருத்துவமனை மருத்துவ கல்லூரியிடம் சென்று தெரிவித்தால் இதனை மின்வாரியம் தான் பராமரிக்கிறது என்றும் ஒவ்வொரு துறையும் மாறி மாறி தங்களை சுற்ற விடுவதாகவும் இதனால் கடந்த இரண்டு வருடங்களாக இந்த மின்விளக்கு எரியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த அவலத்தை நினைவு கூறும் வகையில் இந்த மின் விளக்கு எரியாமல்போன ஜூலை மாதம் 15-ஆம் தேதி 2022-ம் வருடத்திலிருந்து இரண்டு வருடங்கள் நிறைவு பெறுவதை ஒட்டி அந்த மின் விளக்கிற்கு நினைவு அஞ்சலி போஸ்டர் அடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த போஸ்டரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.