அணுமின் நிலையத்தால்தான் கடல் வளத்திற்கு பாதிப்பு என தவறான தகவல் பரவுகிறது- கூடன்குளம் அணுமின்நிலைய வளாக இயக்குனர் ஜாய் வர்கீஸ்
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் வெப்பநீரால் எந்த பாதிப்பும் கடல் விலங்குகளுக்கும் மீன்களுக்கும் ஏற்படவில்லை.
அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள சாராள் டக்கர் கல்லூரியில் வைத்து நடைபெற்றது. இதில் அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல வளாகம், தூத்துக்குடி வஉசி பொறியியல் கல்லூரி, நாகர்கோவில் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் பயின்று 2022-23 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 612 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில் பல்கலைக்கழக தரவரிசையில் முதலிடம் பெற்றமைக்காக 15 மாணவர்களுக்கு பதக்கங்களும் சிறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கூடங்குளம் அணுமின் நிலைய முதன்மை விஞ்ஞானி மற்றும் வளாக இயக்குனர் ஜாய் வர்கீஸ் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “உலகத்தின் மொத்த மின் தேவையின் 2.5% மின் உற்பத்தியை மட்டுமே இந்தியாவில் உற்பத்தி செய்து வருகிறோம். இந்திய நாட்டின் மக்கள் தொகை உலக மக்கள் தொகையின் 16 சதவீதமாக உள்ளது. இந்தியாவின் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 65% மின் உற்பத்தி நிலக்கரி மூலம் செய்யப்பட்டு வருகிறது. அணு மின் உற்பத்தி மூலம் இரண்டு சதவீதம் மட்டுமே மின் உற்பத்தியானது நடைபெற்று வருகிறது. அமெரிக்க நாட்டில் ஒரு தனி மனிதனுக்கு 13,000 யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. அதேபோல் இந்தியாவில் ஒரு தனி மனிதனுக்கு 700 யூனிட் மின்சாரம் மட்டுமே தேவைப்படும் நிலை இருந்து வருகிறது.
காலநிலை மாற்றம் குறித்து அதிக அளவில் தொடர்ந்து பேசி வருகிறோம். அனல் மின் நிலையம் மூலம் பெறப்படும் மின்சாரத்தால் அதிகளவு சாம்பல் வெளியேறுகிறது நிலத்தடி நீர் மாசு ஏற்படுகிறது கடல் மாசு ஏற்படுவது போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகிறது. நிலக்கரியின் பயன்பாடு நாளுக்கு நாள் இந்திய அளவில் குறைந்து வருகிறது. நீர்மின் நிலையங்கள் மூலம் மின்சார உற்பத்தி செய்யப்படும்போது மிகப்பெரிய பரப்பளவு தேவைப்படுகிறது. பருவ மழை காலங்களில் மட்டுமே நீர் மின் நிலையங்களால் மீன் உற்பத்தி அதிக அளவு செய்ய முடிகிறது. காற்றாலை மின் உற்பத்தி இயற்கை சார்ந்த மின் உற்பத்தியாக இருந்தாலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் காலத்தில் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது. சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியால் பெருமளவு மின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை இன்றளவும் இருந்து வருகிறது. மாற்று மின் உற்பத்தியில் அணுமின் உற்பத்தி முக்கிய இடம் வகித்து வருகிறது. எதிர்காலத்தில் மின்சார தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்வதில் அணுமின் நிலையங்கள் முக்கிய பங்காற்றும். அணுமின் நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் போது மிக குறைவான எரிபொருளே தேவைப்படுகிறது.
பயன்படுத்தப்பட்ட எரிபொருட்களை வெளியேற்றுவதற்கும் மிகச் சிறப்பான தொழில்நுட்பங்கள் தற்போது கண்டறியப்பட்டு வருகிறது. கூடன்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது அணு உலைக்கு உட்புறத்தில் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் வெளிப்புறத்தில் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே அதன் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அணு உலையில் வெப்பம் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் இயற்கை முறையில் அணு உலைகள் குளிரூட்டப்படும்படியான அமைப்பு வேறெங்கும் இல்லாத வகையில் உடன் குளத்தில் அமைந்துள்ளது. மிகப்பெரிய அளவிலான எந்த பாதிப்பும் ஏற்படாத கடற்பகுதியாக கூடங்குளம் பகுதி கண்டறியப்பட்டு ரஷ்ய தொழில்நுட்பத்தின் மூலம் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சுனாமி போன்ற எந்தவிதமான பாதிப்பு ஏற்பட்டாலும் பாதிக்கப்படாத வகையிலேயே அணுமின் நிலையம் அமைந்துள்ளது. 2004 ஆம் ஆண்டு சுனாமி காலத்தில் உருவான அலையின் உயரத்தை விட அதிகப்படியான உயரத்திலேயே அணுமின் நிலையம் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களாக கடலில் ஏற்படும் வெப்பத்திற்கு கூடங்குளம் அணுவின் நிலையம்தான் காரணம் என தகவல்கள் பரவி வருகிறது.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அளவீடு அடிப்படையிலேயே அணுமின் நிலையத்தில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இங்கு நடக்கும் அனைத்து அளவீடுகளும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உயர் அதிகாரிகளின் கணக்கில் உள்ளது. அவர்களிடமும் இந்த தகவல்கள் இருக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் வெப்ப நீரினால் கடல் விலங்குகளுக்கும், மீன்களுக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படுவது கிடையாது. கடல் கொந்தளிப்பு என்பது இயற்கையாக நடந்து வருகிறது. மேலும் கடலுக்குள் கட்டப்படும் புதிய கட்டுமானங்களாலும் கடல் அரிப்புகள் ஏற்பட்டு வருகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிதாக எந்த கட்டுமானங்களும் கட்டப்படவில்லை. மீனவர்களை பாதுகாக்கும் வகையில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. அணுமின் நிலையத்தால் சுற்றுப்புறச் சூழலை பாதிக்கும் வகையில் எந்த செயல்பாடுகளும் நடக்கவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் வெப்பநீரால் மீன் உற்பத்தி பாதிக்கப்படுவதாக சமீப காலமாக தவறான தகவல்கள் பரவி வருகிறது என தெரிவித்தார். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளும் அணுசக்தி மின்சாரத்தை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறது. மரபுசாரா எரிசக்தி துறையின் தேவை தற்போதைய நிலையில் அதிகரித்து வருகிறது” என தெரிவித்தார்