எதுவும் நமக்கு வரவில்லை, பின் அந்த அரசுடன் என்ன நெருக்கம் இருக்க முடியும்? - கனிமொழி எம்பி காட்டம்
முதல்வர் எப்போதும் மக்களிடம் பழகும் போது எளிமையாக அன்பாக பழகக்கூடியவர், ஆனால் தங்களுடைய உரிமைகள் என்று வரும் பொழுது தலைவர் கலைஞர் போல உறுதியாக போராடக்கூடியவர்.
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 253வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் இருக்கும் முழு உருவ சிலைக்கு தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் மற்றும் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேயர், துணைமேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி கூறும் பொழுது, “சுதந்திர போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்த தளபதிகளில் ஒருவராக இருக்கக் கூடியவருக்கு இன்று, மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் வாய்ப்பு கிடைத்தது பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது. மணிமண்டபத்திற்கு அனுமதி வழங்கி மணிமண்டபத்தை கலைஞர் கட்டிக்கொடுத்தார். கலைஞர் ஆட்சியில் இருந்தபோதுதான் அருந்ததியருக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அது சில பேரால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று அதை எதிர்த்து மிகப்பெரிய வெற்றியை முதல்வர் ஸ்டாலின் பெற்று தந்துள்ளார். திமுக அரசு முதல்வர் ஸ்டாலின் ஆட்சி என்பது ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, விளிம்பு நிலையில் இருக்கும் அத்துனை மக்களுக்கும் உழைக்கக் கூடிய ஓர் அரசு. எல்லோரையும் அரவணைத்து முதல்வர் பதவியேற்றுக் கொண்ட அன்றே சொன்னது போல வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் ஒன்றாக பாரபட்சம் இல்லாமல் உழைக்கக்கூடிய அரசு. திராவிட இயக்கத்தின் மிக முக்கியமான கருத்தாக இருக்கக்கூடிய ஒடுக்கப்பட்ட மக்களை அவர்களுக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்று பாடுபடும் அரசாக முதல்வர் ஸ்டாலின் கலைஞர் வழியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
முதலமைச்சர் எந்த காரணம் கொண்டும் நம்முடைய உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டார். திமுக தொடர்ந்து உரிமைகளுக்காக போராடிக் கொண்டு இருக்கிறது. மத்திய நிதி நிலை அறிக்கையில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் வரவேண்டிய பணம் வரவில்லை, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணம் வரவில்லை, மழை வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட சென்னை போன்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வரவில்லை, இதன் பிறகும் மத்திய அரசுடன் என்ன நெருக்கம் இருக்க முடியும். முதல்வர் எப்போதும் மக்களிடம் பழகும் போது எளிமையாக அன்பாக பழகக்கூடியவர், ஆனால் தங்களுடைய உரிமைகள் என்று வரும் பொழுது தலைவர் கலைஞர் போல உறுதியாக போராடக்கூடியவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.