Actor Vijay: காமராஜர் பிறந்தநாள்; விஜய் ரசிகர்களின் வாழ்த்துக்களுடன் கூடிய அரசியல் போஸ்டர் - நெல்லையில் பரபரப்பு
நெல்லை மாநகரில் நாளைய முதல்வர் என நடிகர் விஜயை குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் கலந்து கொள்ளும் சில நிகழ்ச்சிகள் அவர் அரசியலுக்கு வருவதை முன்னோட்டமாக அமைந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய் மாணவ, மாணவிகளுக்கு நேரில் ஊக்கத்தொகை வழங்கியிருப்பதும் அதில் அவர் பேசிய விதமும் வரக்கூடிய தேர்தலுக்கு முன்பு அவர் தீவிர அரசியலுக்கு வர திட்டமிட்டிருப்பதாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் அரசியல் வருகை குறித்த காட்சிகளுடன் போஸ்டர்களும் ஒட்டப்பட்டது. நெல்லை மாநகர் பகுதியில் குறிப்பாக நெல்லை சந்திப்பு, டவுண் உள்ளிட்ட பகுதிகளில் பாளையங்கோட்டை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அதில் பிறந்தநாள் வாழ்த்து மட்டுமில்லாமல் அரசியலில் நடிகர் விஜய் வருகைக்கான காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. ஏற்கனவே நடிகர் விஜய் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு அளிக்கும் விழாவில் காமராஜரை பற்றியும், அம்பேத்கரை பற்றியும், பெரியாரை பற்றியும் படியுங்கள் என மாணவர்கள் மத்தியில் தெரிவித்தார். இந்த நிலையில் ஏற்கனவே அம்பேத்கர் பிறந்த நாளை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அம்பேத்கரின் பிறந்த தினத்தை ஒட்டி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் அரசியல் வசனங்கள் இடம்பெற்றிருந்தது.
குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா வரும் ஜூலை 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தற்போது காமராஜர் பிறந்தநாள் விழாவை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிரம்மாண்டமான முறையில் கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதனையொட்டி நெல்லை மாநகர் பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் பாளையங்கோட்டை பகுதி இளைஞரணி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் அதிர வைக்கும் அரசியல் வசனங்கள் இடம் பெற்றிருக்கிறது. அதில் கல்வி கண் திறந்த ஐயா காமராஜர் வழியில் நாளைய தலைமுறையை வழிநடத்தும் நாளைய முதல்வரே என குறிப்பிட்டு சட்டமன்ற முகப்பு படத்துடன் ஒரு போஸ்டரும், 1954ல் தமிழகம் கண்டெடுத்த தங்கம் அய்யா காமராசர் 2026 இல் தமிழகத்தின் தேடல் என விஜயை குறிப்பிட்டு மற்றொரு போஸ்டரும் பிரம்மாண்டமான முறையில் நெல்லை வண்ணாரப்பேட்டை முருகன் குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டப்பட்டுள்ளது. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து விட்டதாக அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் நெல்லை மாநகரில் நாளைய முதல்வர் என நடிகர் விஜயை குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து பரபரப்பையும், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்