செந்தில் பாலாஜி, தமிழக முதலமைச்சர் மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி தர வேண்டும் - டாக்டர் கிருஷ்ணசாமி
தமிழகத்தில் கருணாநிதி முதலமைச்சராக வந்த பிறகு தான் மது விற்பனை அதிகமாக நடைபெற்றது.
நெல்லை சந்திப்பில் புதிய தமிழர் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, "தமிழகத்தில் கருணாநிதி முதலமைச்சராக வந்த பிறகு தான் மது விற்பனை அதிகமாக நடைபெற்றது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை என்பது அதிகமாக காணப்படுகிறது. 2023-2024 ஆம் ஆண்டுகளில் 44 ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக்கில் விற்பனை நடைபெறுகிறது. நாளுக்கு நாள் அதிகமாக தமிழகத்தில் இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். தமிழகத்தில் தற்போது 60% பேர் கட்டிட தொழிலாளிகள் இளைஞர்கள் குடிப்பழத்துக்கு அடிமையாகி வந்துள்ளனர். ஏழைக் குடும்பங்களை பாதிக்க கூடிய அளவில் அரசு டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சட்ட விரோதமாக 5,632 அரசு மதுபான கடைகளிலும் பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் வரக்கூடிய வருமானம் அனைத்துமே அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் கம்பெனிக்கு செல்கிறது.
இந்த அரசு மதுபான கடைகள் மூலமாக ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாங்கள் தமிழக ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம். குறிப்பாக பாண்டிச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் மதுபானங்கள் அதிகமாக தமிழகத்திற்கு வருகிறது. இது தொடர்பாக தனியாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதும் எங்களது கோரிக்கையாக வைத்துள்ளோம். அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசு மதுபான கடைகள் மூலமாக ஊழல் செய்யும் பணம் தமிழக முதலமைச்சரின் குடும்பத்திற்கு நேரடியாக செல்கிறது. இது தொடர்பாக செந்தில் பாலாஜி மற்றும் தமிழக முதலமைச்சர் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
இதை தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அனுமதி இல்லாத பார்கள் மூலம் மாதத்திற்கு ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை வசூல் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து அரசு மதுபான கடைகளில் மிகப்பெரிய ஊழல் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவிலிருந்து நீக்கப்பட வேண்டும். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தமிழக முதலமைச்சர் மீது வழக்கு தொடர்வதற்கு ஆளுநர் அனுமதி தர வேண்டும். அதற்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக வழக்கு தொடர ஆளுநரிடம் நான் நேரடியாக சென்று அனுமதி கேட்டு உள்ளேன். அதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் எனவும் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்குள் தமிழகத்தில் இளைஞர்களுக்கு மதுவை கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என திமுக நினைக்கிறது. அது ஒருபோதும் நடக்காது. வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வரவில்லை என்றால் புதிய தமிழகம் கட்சி நகரம் மற்றும் கிராமப்புற பெண்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்