வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கப்படும் காட்டுப்பன்றிகள்! விரைவில் அரசாணை - அமைச்சர் மதிவேந்தன்
மாஞ்சோலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அங்கு சூழல் சுற்றுலா அனுமதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட வன அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் நெல்லை மாவட்ட வனப்பாதுகாவலர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் முதன்மை தலைமை வன பாதுகாவலர் சுதான்சி குப்தா களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வன பாதுகாவலர் மாரிமுத்து, சூழலியல் மேம்பாட்டு அலுவலர் அன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மாவட்ட வனத்துறை அலுவலர்கள், வனச்சரகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நெல்லை, தூத்துக்குடி., தென்காசி மாவட்டங்களில் புதிதாக மேற்கொள்ளப்பட உள்ள வனத்துறை திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மதிவேந்தன்,
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கொண்டுவரப்பட உள்ள வனத்திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. மணிமுத்தாறு பகுதியில் பல்லுயிர் பூங்கா அறிவிக்கப்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு திட்டம் மாற்றப்பட்டது தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்படும். நிலம் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் இருந்திருந்தால் இந்த திட்டம் மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிவித்தார். சூழல் சுற்றுலா நெல்லை மாவட்டத்திற்கு கொண்டு வருவதற்கான திட்டம் உள்ளது. தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆன நிலையில் மாவட்ட வனஅலுவலர் நியமிக்கப்படாமல் இருக்கிறது என்ற கேள்விக்கு மாவட்ட வன அலுவலர் நியமனம் அரசின் பரிசீலனையில் உள்ளது விரைவில் வன அலுவலர் நியமிக்கப்படுவார். காலியாக உள்ள வனத்துறை பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுவதற்கான பணிகள் நடந்து வருகிறது.
யானைகளை கண்காணிக்கவும், பாதுகாக்கவும் வனத்தில் வேட்டை தடுப்பு பணியாளர்கள் பணியில் உள்ளனர். யானைகளை பாதுகாக்க கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. யானைகளை பாதுகாக்க தனி குழு அமைக்க முடியாது. வனத்தில் உள்ள அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பது வனத்துறையின் முக்கிய கடமை. காட்டுப்பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பான ஆலோசனை அரசின் பரிசீலனையில் உள்ளது. அதற்கான அரசாணை விரைவில் வெளியிடும். மாஞ்சோலை விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது அது குறித்து பேச முடியாது. வனத்துறை சார்பில் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பான நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாஞ்சோலை புலிகள் காப்பகமாக இருப்பதாலும் காப்புக்காடுகள் பட்டியலில் இருப்பதாலும் சூழல் சுற்றுலா அனுமதி வழங்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சூழல் சுற்றுலாவாக இருந்தாலும் வனத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் வனத்துறைக்கு உள்ளது. வனம், வனவிலங்குகள், வனபரப்பு ஆகியவை பாதுகாக்க வேண்டும். மக்களும் முக்கியம் என்பதால் அனைத்தையும் கருத்தில் கொண்டு சூழல் சுற்றுலா தொடர்பாக முடிவெடுக்கப்படும். வனப்பகுதியில் குற்றங்கள் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. வன குற்றங்கள் அதிக அளவு குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து அமைச்சர் மதிவேந்தனை சந்தித்து மாஞ்சோலை பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கை தொடர்பாக மனு அளித்ததுடன் வாழ்வாதாரத்தை மாஞ்சோலை மலைப்பகுதியிலேயே தங்களுக்கு ஏற்படுத்தி தரவேண்டும். மலைப்பகுதியிலேயே நிலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க அமைச்சரிடம் தெரிவித்தனர். மேலும் ஊதியம் இல்லாமல் 65 நாட்களுக்கு மேலாக சிரமப்பட்டு வருவதாகவும் உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்ய முடியாமல் இருப்பதாகவும் அமைச்சரிடம் வேதனை தெரிவித்தனர். மேலும் 10 நாட்களுக்கு மேலாக மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட மலை கிராமங்களில் மின்சாரம், குடிநீர், தொலைதொடர்பு என எதுவும் இல்லாமல் சிரமத்தை சந்தித்து வருவதையும் அவர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக அதிகாரிகளுடன் பேசி உடனடியாக உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.