கூகுள் பே பணம் வருவதில் தாமதம்.. சண்டையில் முடிந்த சம்பவம்..குற்றாலத்தில் பரபரப்பு!
பணம் அனுப்பியதாக உணவு அருந்தியவர்கள் கூறியும் எனக்கு எதுவும் வரவில்லை, பொய் சொல்கிறீர்கள் என்று உரிமையாளர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுற்றுலா பயணிகள், கடை உரிமையாளரிடையே கைகலப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று குற்றாலம். இங்குள்ள அருவிகளில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது உண்டு. குறிப்பாக விடுமுறை தினங்களில் கூட்டம் அலைமோதும். குறிப்பாக சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நேற்று கும்பாபிஷேசம் என்பதால் தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் குற்றாலம் செல்லும் வழிகளில் உள்ள கடைகளிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்த சூழலில் குற்றாலம் அருவிக்கு செல்லும் நுழைவுவாயில் அருகே உள்ள ஒரு கடையில் நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உணவு அருந்திவிட்டு அதற்கான தொகையை ஆன்லைன் மூலம் அனுப்பியதாக தெரிகிறது.
கூகுள் பே மூலம் பணம் அனுப்பிய நிலையில் அதற்கான பணம் சென்று சேர்ந்ததற்கான மெசேஜ் மற்றும் ஒலிபெருக்கி வாயிலான எந்த தகவலும் கடை உரிமையாளருக்கு வரவில்லை என்று தெரிகிறது. ஆனால் பணம் அனுப்பியதாக உணவு அருந்தியவர்கள் கூறியும் அதனை ஏற்க மறுத்த உரிமையாளர் எனக்கு எதுவும் வரவில்லை, பொய் சொல்கிறீர்கள் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுற்றுலா பயணிகள் மற்றும் கடை உரிமையாளரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பினிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் கடையில் இருந்த பொருட்களை சுற்றுலா பயணிகள் சேதப்படுத்தியதாக தெரிகிறது. தொடர்ந்து அருகே இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் இருதரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் அதற்குள் இரு தரப்பும் சாலையில் ஒருவரை ஒருவர் தாக்கி கட்டிப்புரண்டு சண்டியிட்டுக் கொண்டனர். தகவலறிந்த குற்றாலம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலை தடுக்க முயற்சி மேற்கொண்டனர்.
தொடர்ந்து இரு தரப்பினரையும் விசாரணை நடத்தினார். ஆன்லைன் மூலம் பணம் அனுப்பவதில் நெட்வொர்க் பிரச்சினை காரணமாக இது போன்று சில நேரங்களில் தாமதமாக பணம் வந்து சேர்ந்ததற்கான மெசேஜ் வரும் நிலையில் சிறு பிரச்சினைக்காக இரு தரப்பினரும் சாலையில் சண்டையிட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற சம்பவங்கள் குற்றாலம் பகுதிகளில் தொடர் கதையாகி வரும் நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கவும், கூடுதல் போலீசாரை பணியில் அமர்த்தவும் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.