ரயில் மூலம் தென்காசி வந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு... 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் !
தென்காசி மாவட்டம் கணக்கப்பிள்ளை வலசை தனியார் பள்ளியில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று வழங்குகிறார்
தென்காசி மாவட்டம் கணக்கப்பிள்ளை வலசை தனியார் பள்ளியில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று வழங்குகிறார்.
அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் தென்காசிக்கு வருகை புரிந்தார். குறிப்பாக அவர் முதல்வரான பின் முதல் முறையாக ரயில் மூலமாக தென்காசிக்கு இன்று வருகை புரிந்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பிலும், திமுக கட்சியினர் சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக மாவட்ட ஆட்சியர், காவல் துறையினர், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் வரவேற்றனர்.. தென்காசி ரயில் நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக குற்றாலம் சென்ற முதல்வருக்கு தென்காசி, மேலகரம், நன்னகரம், குற்றாலம் உள்ளிட்ட இடங்களிலும் திரளானோர் வரவேற்றனர்.. பல இடங்களில் மேள தாளங்கள் முழங்க நாட்டுப்புற கலைகள் மூலம் வரவேற்றனர். அங்கிருந்து கார் மூலம் கிளம்பிய முதல்வர் விழா மேடைக்கு வந்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் 34 துறைகளை சேர்ந்த 1,03,508 பேருக்கு 182 கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை இன்று வழங்குகிறார்.
இதில் 22 கோடி மதிப்பிலான 57 முடிவடைந்த பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறார். மேலும் 34 கோடி மதிப்பில் 23 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். முதல்வரின் வருகையையொட்டி ஐஜி, டிஐஜிக்கள், எஸ்பிக்கள் உட்பட 10 மாவட்டங்களை சேர்ந்த 3500 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து, விழா முடிந்தவுடன் முதல்வர் அங்கிருந்து புறப்பட்டு இலத்தூர், கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர், சாத்தூர் வழியாக ராஜபாளையத்தை சாலை மார்க்கமாக செல்கிறார். அங்கு உள்ள ஒரு தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு மாலை அங்கிருந்து புறப்பட்டு மதுரை நோக்கி முதல்வர் புறப்படுகிறார்.
மேலும், விழா நடைபெறும் இடம், முதல்வர் வந்து இறங்கிய தென்காசி ரயில் நிலையம், முதல்வர் ஓய்வெடுக்க உள்ள குற்றாலம் அரசினர் மாளிகை, முதல்வர் செல்லக்கூடிய சாலைகள் உள்ளிட்டவைகளில் தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் முதல்வர் வருகையையொட்டி போக்குவரத்து ஏற்பாடுகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..