வரக்கூடிய தேர்தல்களில் இதே நிலை நீடிக்காது, மாற்றம் கண்டிப்பாக நிகழும் - கிருஷ்ணசாமி
வரக்கூடிய தேர்தல்களில் இதே நிலை நீடிக்காது, மாற்றம் கண்டிப்பாக நிகழும். என்னை பொறுத்தவரை இந்த தொகுதிக்கு முன்னால் நின்று குரல் கொடுப்பேன்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் குறித்து புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி தென்காசியில் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறும் பொழுது, ”நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் புதிய தமிழகம், அதிமுக, தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சியின் வேட்பாளராக தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட எனக்கு 2 லட்சத்து 29 ஆயிரம் வாக்குகளை அள்ளி தந்த வாக்காளர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. தென்தமிழகத்தின் வளர்ச்சி தென்காசியின் தொழில் வளம், வேளாண்மை, கல்வி வளம் ஆகியவற்றை முன்னிறுத்தி இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை முன்னிறுத்தி இந்த தேர்தலில் மூன்று வார காலம் மக்களை நேரடியாக சந்தித்தேன்.
இந்த தொகுதியின் பின்னடைவை மனதில் வைத்து நாடாளுமன்றத்தில் வலுவான குரல் இருந்தால் கடந்த 50 ஆண்டு கால பின்னடைவை சரிசெய்து இந்த பகுதியில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையோடு இந்த தேர்தலை சந்தித்தோம். ஆனால் அதற்கான போதிய வாக்குகள் மக்களிடத்தில் இருந்து வரவில்லை. எனினும் என்னுடைய மற்றும் கட்சியினுடைய பணி தேர்தலுக்கு முன் எப்படி இருந்ததோ அதில் இம்மியளவும் குறையாது. தேர்தல் வரும் போகும். ஆனால் மக்கள் பணியில் எந்த வித சுணக்கமும் இருக்காது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ”இந்த தேர்தலில் முடிவுகள் இப்படி அமைவதற்கு முக்கியமான காரணம் ஒன்று பிஜேபியை மையமாக வைத்து அதற்கு எதிரான கருத்துக்களை வைத்து ஒரு அணி 2019, 2021 தேர்தலிலே அவர்கள் வலுவான ஒரு கூட்டத்தை அமைத்து கொண்டார்கள்.
பிஜேபி அகில இந்திய அளவிலே ஒரு கூட்டணியை அமைத்துக் கொண்டது. ஒட்டுமொத்தமாக பிஜேபி, எதிர் பிஜேபி ஆதரவு என இரண்டு கருத்துகள் தான் நிறுத்தப்பட்டது. மூன்றாவதாக எங்களது கூட்டணி கட்சிகள் அகில இந்திய அளவில் மக்கள் மத்தியில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான அரசியல் கருத்திற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அதுபோக காங்கிரசின் தேர்தல் அறிக்கைகள் வலுவான மையம் கொண்டு விட்டது. இது இப்படியே இருக்காது. வரக்கூடிய தேர்தல்களில் இதே நிலை நீடிக்காது, மாற்றம் கண்டிப்பாக நிகழும்” என நம்பிக்கை தெரிவித்தார். என்னை பொறுத்தவரை இந்த தொகுதிக்கு முன்னால் நின்று குரல் கொடுப்பேன் என்றார்.
மேலும் பேசிய அவர், ”மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 4 தலைமுறைகளாக பணியாற்றி வந்தனர். 1998 ஏறக்குறைய 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களின் சொந்த பகுதி என்றால் எஸ்டேட்டை தான் காட்ட முடியுமே தவிர வேறு எந்த பகுதியையும் காட்ட முடியாது. இந்த நிலையில் தற்போது தொழிலாளர்களை கட்டாய விருப்ப ஓய்வை மிரட்டி வாங்குவதாக வாங்குகின்றனர். இது அப்பட்டமான மனித உரிமை, சட்ட விதி மீறலாகும். இது அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது சட்டப்படி குற்றம். எனவே தமிழக அரசு உடனடியாக தொழிலாளர் நல ஆணையரை அங்கு அனுப்பி தடுத்து நிறுத்த வேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் நிலை அறிய வழக்கறிஞர் குழு அமைக்கப்பட உள்ளது. விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து தேயிலை தோட்டக்கழகத்தின் சார்பில் தமிழக அரசு எடுத்து நடத்த வேண்டும் என வலியுறுத்த இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.