இடிந்த நிலையில் வீட்டுவசதி குடியிருப்புகள்.. சமூக விரோத செயல்களுக்கு புகலிடமாகும் அவலம்..
வருமுன் காப்பது அரசின் கடமை என மக்கள் வலியுறுத்துகிறார்கள்
தூத்துக்குடி மாவட்டம் சங்கரப்பேரியில் கடந்த 1995 ஆம் ஆண்டு சுமார் ரூ 383 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இராமநாதாபுரம் வீட்டுவசதி பிரிவின் கீழ் அரசு ஊழியர்களுக்கான வாடகை குடியிருப்பு திட்டத்தின் கீழ் இப்பகுதியில் 198 குடியிருப்புகள் அமைக்கப்பட்டன.
ஏ.பி.சி மற்றும் டி என நான்கு பிரிவுகளில் மூன்று தளங்களாக கட்டப்பட்ட இக்குடியிருப்பில் காவல்துறையினர், பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்காக கட்டப்பட்டன. இருப்பினும், மோசமான கட்டுமானம் மற்றும் தொடர்ச்சியான சேதங்கள் காரணமாக குடியிருப்பாளர்கள் 2015-இல் கட்டிடங்களை காலி செய்யத் தொடங்கினர்.
பல ஆண்டுகளாக, காலியாக உள்ள கட்டிடங்களில் மது அருந்துவதற்கும் போதைப்பொருட்களை உட்கொள்வதற்கும் குற்றவாளிகள் அடிக்கடி வரத் தொடங்கினர். அந்த இடத்தை கஞ்சா குகையாக மாற்றிய பல இளைஞர்கள், வீட்டுவசதி வாரிய காலனியில் உள்ள தெரு விளக்குகளையும் உடைத்து இரவு நேரங்களில் அந்த இடத்தை இருளில் மூழ்கடித்துள்ளனர். கட்டிட ஜன்னல்களில் இருந்த இரும்பு கம்பிகளையும் திருடி சென்றுள்ளனர். சட்ட விரோத செயல்களை கேள்விக்குட்படுத்த தைரியம் வந்த உள்ளூர் மக்களுக்கு சமூக விரோதிகள் பலமுறை கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த வளாகங்களில் கஞ்சா விற்பனையும் நடைபெறுகிறது.
பலமுறை புகார் அளித்ததையடுத்து, தாளமுத்துநகர் போலீஸார் அப்பகுதிக்கு அண்மையில் சென்று பார்வையிட்டனர். பின்னர், காலியாக உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்த மர்மநபர்கள், போலீஸ் வாகனங்கள் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது. அரசாங்கம் உடனடியாக கட்டிடங்களை இடித்து, அருகில் வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். பொதுப்பணித்துறை வழிகாட்டுதல்களின்படி, அரசு கட்டிடங்கள் குறைந்தது 50 ஆண்டுகள் வாழத் தகுதியுடையதாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டாலும் , இந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 20 ஆண்டுகளில் குடியிருப்புகள் சேதமடைய துவங்கி தற்போது எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது எனக்கூறும் சமூக ஆர்வலர்கள், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.
இது தொடர்பாக வீட்டுவசதி துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பழுதடைந்த கட்டிடங்களை அகற்ற அரசுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், அரசின் ஒப்புதலை பெற்றப்பின் முழுமையாக கட்டிடங்கள் அகற்றப்பட்டு புதிய குடியிருப்புகள் அமைக்கப்படும் என்கின்றனர்.
இப்பகுதிக்கு அருகிலேயே குடியிருப்பு பகுதியில் உள்ளது. பொதுப்பாதையாக இவ்வழியை உபயோகித்துவரும் மக்கள், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய சூழலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் நிலை அறியாமல் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர். கட்டும்போதே இடிந்து விழும் மவுலிவாக்கங்கள், பழைய வீடுகள் இடிந்து விழுந்து உயிரிழப்பு என நிகழ்ந்துவரும் நிலையில் உயிர்பலிக்கு முன்பாக அகற்றவும், சமூக விரோதிகளின் செயல்களை தடுக்கவும் வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.
தூத்துக்குடி நகரில் ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பாக 50 ஆண்டுகள் பழமையான வீடுகள் இடிந்து விழுந்ததில் கர்ப்பிணி பெண் மற்றும் அவரது தாயார் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் கடந்தாண்டு ஜனவரி மாதம் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது பட்டதாரி பெண் ஒருவர் உயிரிழந்தார், கடந்த 2015-ஆம் ஆண்டு தூத்துக்குடி மட்டக்கடை பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே ஒரு வயது குழந்தை உட்பட மூவர் உயிரிழந்தனர். வருமுன் காப்பது அரசின் கடமை, வந்த பின் ஆய்வு செய்வதும் அகற்றுவதும் என்பது தவறான உதாரணமாக மாறிவிடும் என்கின்றனர்.