விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சேர்மனுக்கு சிக்கல்! கவுன்சிலர்கள் கும்பலாக எடுத்த அதிரடி முடிவு!
ஆளுங்கட்சி தலைவர்களுக்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு சம்பவமாக இது நடந்துள்ளது.
![விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சேர்மனுக்கு சிக்கல்! கவுன்சிலர்கள் கும்பலாக எடுத்த அதிரடி முடிவு! Councillors move no-confidence motion against vickramasingapuram Municipal Chairman விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சேர்மனுக்கு சிக்கல்! கவுன்சிலர்கள் கும்பலாக எடுத்த அதிரடி முடிவு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/26/99f182a511afa3f15e62a4b32931482b1719415846350571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவராாக உள்ள திமுகவை சேர்ந்த செல்வ சுரேஷ் பெருமாள் மீது ஆளும் கட்சியான திமுக உறுப்பினர்கள் 14 பேர் ஒன்றிணைந்து கையொப்பமிட்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் கடிதத்தை நகராட்சி ஆணையர் மகேஸ்வரனிடம் வழங்கி உள்ளனர்.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் மொத்தமுள்ள உறுப்பினர்களில் இரண்டு வார்டு உறுப்பினர்கள் காலமாகிவிட்ட நிலையில் மீதம் 19 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் அதிமுகவினர் மூன்று பேர் உள்ளனர். மீதமுள்ள திமுக உறுப்பினர்களில் தலைவர், துணைத் தலைவரை தவிர்த்து இதர உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கையொப்பமிட்டு நகராட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக இது தொடர்பாக அவர்கள் அனைவரும் கையொப்பமிட்ட நம்பிக்கை இல்லா தீர்மான கடிதத்தை நகராட்சி ஆணையரிடம் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டிருப்பது, விக்கிரமசிங்கபுரம் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் நகர்மன்ற உறுப்பினர்களாக பணியாற்றி வருகிறோம். ஆனால் அனைத்து வார்டுகளிலும் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு மக்கள் பணியும் நடைபெறவில்லை. நகராட்சி சேர்மன் செல்வசுரேஷ் பெருமாள் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் தன்னிச்சையாக செயல்படுகிறார். அனைத்து வேலைகளும் தரமற்ற முறையில் நடைபெறுகிறது. காண்ட்ரக்டரிடம் கேட்டால் நான் பலருக்கு கமிஷன் கொடுத்து வேலை செய்கிறேன் என்கிறார். பொதுமக்களுக்கு தேவையான எந்த ஒரு திட்டமும் நடைபெறுவதில்லை. பொதுமக்களுக்கு முறையான குடிநீர் வழங்கப்படுவதில்லை. நகராட்சியில் அனைத்து மக்கள் பிரச்சினைகளுக்கும் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடைபெறுகிறது. எனவே நகராட்சி சேர்மன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறோம். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் மக்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் லஞ்சம் கொடுத்தால் தான் பணி நடைபெறுவதாகவும், எந்த திட்டமிடலும் இல்லாமல் கமிஷன் வாங்கிக்கொண்டு பணிகள் நடைபெறுவதாகவும் திமுக உறுப்பினர்கள் கையொப்பமிட்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் கடிதத்தை நகராட்சியின் ஆணையரிடம் வழங்கி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் இதுபோன்று ஆளுங்கட்சி தலைவர்களுக்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு சம்பவமாக இது நடந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)