Nellai Kannan Passed Away: தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் காலமானார்!
Nellai Kannan Passed Away: தமிழறிஞர் நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்
தமிழறிஞர் நெல்லை கண்ணன்(Nellai Kannan) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். கடந்த சில நட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நெல்லையில் உள்ள இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 77 என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு பல்வேறு முதலமைச்சர் ஸ்டாலின், எம்.பி திருமாவளவன் உட்பட பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் போது, தமிழுக்கு புகழ் நெல்லை கண்ணன் தான். சமய நிகழ்ச்சியாக இருந்தாலும், பட்டிமன்றமாக இருந்தாலும் நெல்லை கண்ணன் தான் சிறப்பாக இருப்பார். இந்த வீட்டிற்கு ராஜீவ் காந்தி வந்து உணவு அருந்தி விட்டு சென்றதாகவும் என்னிடம் தெரிவிப்பார். காமராஜரை தனது அரசியல் வாழ்வில் கொள்கையாகக் கொண்டு காங்கிரஸில் செயல்பட்டவர் என்று வைகோ தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் குறித்து தெரிந்து கொள்வோம்...
தமிழறிஞரும் இலக்கிய பேச்சாளருமான நெல்லை கண்ணன் 1945-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ம் தேதி பிறந்தார். சிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான இவர், தமிழ் புலமையால் தமிழ்க்கடல் என அழைக்கப்படுகிறார். காமராஜர், கண்ணதாசன் உள்ளிட்ட உள்ள முக்கிய தலைவர்கள், ஆளுமைகள், பிரமுகர்கள் என பலரிடம் நெருக்கமான பழக்கம் கொண்டவர்.
கேட்டார் பிணிக்கும் வல்லமை:
சங்க கால இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரை அறிந்தவர். கம்பர் ராமாயணத்தை கரைத்து குடித்தவர். திறம்பட கற்ற இலக்கியங்களை பட்டிமன்றம் மற்றும் பேச்சரங்கம் மூலமாக, தமிழ் சமூகத்துக்கு தமிழ் உணர்வை ஊட்டிக் கொண்டிருந்தார். அவருடைய தமிழ் புலமையை கண்டு, எதிர் சித்தாந்தம் கொண்டவர்களும் பாராட்டுவர். ஆன்மிகத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ”கேட்டார் பிணிக்கும் தகையவாய்க்” என்ற குறளுக்கு ஏற்ப பேச்சை கேட்பவரின் உள்ளத்தை தன்வயப்படுத்தும் தன்மையும், கேட்காதவரைக் கூட கேட்க தூண்டும் வகையில் இவரது பேச்சானது இருக்கும்.
கருணாநிதியை எதிர்த்து போட்டி:
1996-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி, திமுக-வை எதிர்த்து போட்டியிட்டது. அப்போது சேப்பாக்கம் தொகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போட்டியிட்டார். அப்போது கருணாநிதியை எதிர்த்து போட்டியிட பலர் தயங்கிய நிலையில், காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு பெற்றிருந்த நெல்லை கண்ணன் போட்டியிட்டார்.
தமிழ் சமூகத்துக்கு மிகப் பெரிய இழப்பு:
இவர் பேச்சுகளில் அடிக்கடி காமராஜர் குறித்து, அவரது பெருமைகளை எடுத்துக் கூறியவர். ஆன்மீகவாதியாகவும் பகுத்தறிவு சிந்தனைவாதியான நெல்லை கண்ணன், சாதி, மத வேறுபாடுகளை கடுமையாக எதிர்த்து வந்தார். இவரை சித்தாந்த ரீதியாக பலரும் எதிர்த்தாலும், இவரின் தமிழ் புலமை பேச்சுக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை என்றே என கூறலாம். இவரது தமிழ் புலமையை பாராட்டி, தமிழ்நாடு அரசு இளங்கோவடிகள் விருதை, இவருக்கு வழங்கி கவுரவித்தது. தமிழ்க்கடல் நெல்லை கண்ணனின் மறைவு, தமிழ் சமூகத்துக்கு மிகப் பெரிய இழப்பாகும்
View this post on Instagram