NEET Exam: நீட் தற்கொலையில் முதல் & இரண்டாவது குற்றவாளியாக ஸ்டாலின், உதயநிதியை சேர்க்க வேண்டும் - அண்ணாமலை அதிரடி!
திமுக எதிர்க்கட்சியாக இருந்த காலம் முதல் தற்போது வரை தமிழகத்தில் மட்டும் தான் நீட் தற்கொலைகள் நடைபெறுகின்றன என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டையில் அமைந்திருக்கும் அவருடைய மணி மண்டபத்தில் அமைந்துள்ள திரு உருவ சிலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனாருக்கு அவருடைய மணி மண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை பெருமையாக கருதுகிறேன். 1857 இல் முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்கியதாக கூறுகிறார்கள். ஆனால் அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வீரம் விளைந்த இந்த நெல்லை மண்ணில் ஏராளமானோர் இந்திய சுதந்திரத்திற்காக போராடி இருக்கிறார்கள். அதை இளைய தலைமுறை இடையே கொண்டு சேர்ப்பது நம்முடைய கடமை என்றார். தொடர்ந்து கன்னியாகுமரியில் திமுக குறித்தும், முதல்வர் குறித்தும் அவதூறு பரப்பியதாக உங்கள் மீது முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் புகார் அளித்துள்ளாரே என கேட்டபோது அரசியலைப் பொறுத்தவரை நாங்கள் திமுகவின் பொய்யை தோலுரித்துக் காட்டுவதை அவதூறு பரப்புவதாக திமுகவினர் கூறுகிறார்கள் என்ன அவதூறு பரப்பினேன்? யார் குறித்து அவதூறு பரப்பினேன் என்பதை அவர்கள் சொல்ல வேண்டும்.
நான் பேசியது அவதூறு என்றால், ராமநாதபுரம் மாநாட்டில் பிரதமர் மோடி குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியது அவதூறு இல்லையா? நாடாளுமன்ற திறப்பு விழாவிலே செங்கோலுக்கு பிரதமர் மோடி மரியாதை செய்தது குறித்து அவதூறு கருத்தை பதிவிட்ட அமைச்சர் மனோ தங்கராஜை முதலில் கைது செய்ய வேண்டும். திமுகவின் அவதூறு வழக்குகளை கண்டு பயப்பட போவதில்லை. யார் மரியாதையாக பேசுகிறார்கள், யார் மரியாதை குறைவாக பேசுகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். அரசியலில் கூட கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும் என நினைப்பவன் நான். சில நேரங்களில் திமுகவிற்கு அவர்கள் பாணியிலேயே நாங்கள் பதிலடி கொடுக்க வேண்டி உள்ளது
நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்கள் குறித்து கேட்கிறீர்கள். நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டவர்கள் தொடர்பாக முதல் குற்றவாளியாக முதல்வர் மு. க ஸ்டாலினையும், இரண்டாவது குற்றவாளியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் சேர்க்க வேண்டும். நீட் தேர்வு விவகாரத்தில்ஒன்றுமே இல்லாத பிரச்சினையை பெரிதாக்கி அவர்களை தற்கொலைக்கு தூண்டியது திமுக தான். இந்தியாவில் வேறு எங்கும் நீட் தேர்வு தொடர்பாக தற்கொலைகள் இல்லை, திமுக எதிர்க்கட்சியாக இருந்த காலம் முதல் தற்போது வரை தமிழகத்தில் மட்டும் தான் நீட் தற்கொலைகள் நடைபெறுகின்றன. ஜார்க்கண்டிலே பழங்குடியின மாணவர் நீட் தேர்வில் வெற்றி பெறுகிறார். நீட் தேர்வில் முதல் 10 இடங்களைப் பெற்றவர்களில் நான்கு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். நீட் தேர்வு தொடர்பாக தமிழகத்தில் இனி தற்கொலை நடக்கக்கூடாது என கடவுளை வேண்டிக் கொள்கிறேன். ஒரு வேலை தற்கொலை நடந்தால் அது தொடர்பாக பேசும் அமைச்சர் மீது வழக்கு பதிய வேண்டும். நான்குநேரி சம்பவத்திற்கு போதிய வேலை வாய்ப்பு இல்லாததே காரணம். தென் தமிழகத்தில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
பொறியியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை படித்து முடித்துவிட்டு தென் தமிழகத்தில் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளித்து பல்வேறு தொழிற்சாலைகளை கொண்டு வர வேண்டும். அப்போதுதான் ஜாதி, கந்து வட்டி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தமிழகத்தில் ஜாதியை முன்னிலைப்படுத்தி வெளியாகும் திரைப்படங்களும் மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 28 மாதங்களாக எதையும் செய்யாத முதல்வர் தேர்தல் பயம் காரணமாகவே மீனவர் மாநாடு உள்ளிட்ட பல்வேறு மாநாடுகளை நடத்தி வருகிறார். மீனவர்களுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அதன் காரணமாகவே அரசு நிகழ்ச்சி என்ற பெயரில் அரசியல் மாநாட்டை முதல்வர் நடத்தி வருகிறார்" என தெரிவித்தார்.
இந்த நிலையில் நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களை நிலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் தொடர்ந்து மருத்துவர்களிடம் செய்யப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார் இந்த நிகழ்வுகளில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவின் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.