சென்னை விமான நிலையத்தில் புதிய மாற்றம்! மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு இனி 15 நிமிடம் இலவசம்!
"சென்னை விமான நிலையத்திற்குள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோரை அழைத்து செல்ல, 15 நிமிடங்கள் இலவச பாஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது"சிறப்பு சலுகைகள்

சென்னை விமான நிலையத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும், சர்வதேச முனையம் மற்றும் உள்நாட்டு முனைகளில் பயணிகளை இறக்கி விட்டு விட்டோ, அல்லது பயணிகளை, விமான நிலையத்தில் இருந்து, வாகனங்களில் ஏற்றி கொண்டு, வெளியில் செல்லும்போது, அந்த வாகனம் விமான நிலையத்திற்குள் வந்து,10 நிமிடங்களுக்குள் வெளியேறி சென்று விட்டால், அந்த வாகனங்களுக்கு, பார்க்கிங் கட்டணம் கிடையாது.
பார்க்கிங் கட்டணம் விவரம்:
அந்த வாகனங்கள் இலவசமாக பயணித்துக் கொள்ளலாம். ஆனால் 10 நிமிடங்களுக்கு கடந்து, ஒரு வினாடி ஆனாலும், வாகனங்கள் அடுத்த 30 நிமிடங்களுக்கு, ரூ.85 பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை தற்போது அமுலில் உள்ளது. ஆனால் இந்த விதிமுறைக்கு, பெரும்பாலான பயணிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் போன்றவர்களை ஏற்றுவதற்கோ, அல்லது அவர்களை ஏற்றிக் கொண்டு வந்து விமான நிலையத்தில், இறக்கி விட்டு செல்வதற்கோ வரும் வாகனங்கள், அந்தப் 10 நிமிடங்களுக்குள், வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் வாகனங்களை ஒட்டி வரும் டிரைவர்கள், அதைப் போன்ற பயணிகளை, அவசரப் படுத்தி வாகனங்களில் ஏற்றும் போதோ, இறக்கும்போதோ, அந்தப் பயணிகளுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
சிறப்பு சலுகைகள்
எனவே மாற்றுத்திறனாளி, முதியோர், நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் போன்றவர்களை ஏற்ற வரும் வாகனங்களுக்கு, கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகள் வைத்து வந்தனர். இதுகுறித்து அவர்கள் இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை விமான நிலைய இயக்குனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கும், தொடர்ச்சியாக கோரிக்கை மனுக்கள் அனுப்பி வந்தனர்.
இந்தநிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, இன்று 29-ஆம் தேதி வியாழக்கிழமை முதல், சென்னை விமான நிலையத்தில், மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள், கர்ப்பணிப்பெண்கள் உள்ளிட்ட பயணிகளை ஏற்ற வரும் வாகனங்களுக்கு, இலவச நேரம் 10 நிமிடங்களில் இருந்து, 15 நிமிடங்களாக, கூடுதலாக 5 நிமிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த கூடுதல் இலவச பயணத்தை வாகனங்கள் பெறுவதற்கு வாகன ஓட்டிகள் எந்த நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்தும், இந்திய விமான நிலைய ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சிறப்பு பாஸ் அட்டை
அதன்படி சென்னை விமான நிலையத்திற்குள் வரும் வாகனங்கள், உள்ளே நுழையும் டோல்கேட்டில், வாகனத்தைபதிவு செய்து, வாகன எண்ணுடன் கம்ப்யூட்டர் ரசீது பெரும்போது, அந்த வாகன டிரைவர், டோல்கேட் ஊழியரிடம், மாற்றுத்திறனாளி, முதியோர், நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் போன்றவைகளை ஏற்றி வருவதற்கு செல்கிறது என்ற தகவலை தெரிவிக்க வேண்டும். உடனே டோல்கேட் ஊழியர், கம்ப்யூட்டர் ரசீது உடன், மாற்றுத்திறனாளிகள் காண சிறப்பு பாஸ் அட்டை ஒன்றையும் வழங்குவார்.
அதன் பின்பு வாகனங்கள் உள்ளே சென்று, வருகை பகுதி பயணிகளை ஏற்றவோ, புறப்பாடு பகுதிக்கு சென்று பயணிகளை இறக்கி விடவோ செய்துவிட்டு, வெளியில் செல்லும்போது, அவுட் பகுதியில் உள்ள, டோல்கேட்டில், அந்த வாகனம் உள்ளே வந்த நேரத்தை, கம்ப்யூட்டரில், டோல்கேட் ஊழியர் பரிசோதிப்பார். 15 நிமிடங்களுக்குள் இருந்தால், அந்த வாகனத்திற்கு பார்க்கிங் கட்டணம் எதுவும் வாங்காமல், வெளியில் செல்ல அனுமதித்து விடுவார். அப்போது உள்ளே வரும்போது கொடுத்த, பாஸ் அட்டையை மட்டும், டோல்கேட் கவுண்டரில் கொடுத்து விட்டு வாகனம் சென்றுவிடலாம்.
ஆனால் அதே நேரத்தில் 15 நிமிடங்கள் கடந்து, ஒரு வினாடி ஆகி இருந்தாலும், அடுத்த 30 நிமிடங்களுக்கான பார்க்கிங் கட்டணம் செலுத்தி விட்டு வாகனங்கள் செல்ல வேண்டும். இந்த புதிய விதிமுறை சென்னை சர்வதேச விமான நிலையம் மற்றும் உள்நாட்டு முனையங்கள், போன்றவைகளில் வருகை, புறப்பாடு இரண்டு பகுதிகளுக்கும் பொருந்தும். அதோடு வாடகை கார், சொந்தக்கார், என்ற வேறுபாடு இல்லாமல், ஒயிட் போர்டு, எல்லோ போர்டு, கிரீன் போர்டு அனைத்து வகை வாகனங்களுக்கும் பொதுவானது என்றும் கூறப்படுகிறது.
இந்த புதிய நடைமுறை இன்று முதல் செயல்பாட்டிற்கு, சென்னை விமான நிலையத்தில் வந்துள்ளது. இது பயணிகளுக்கு ஓரளவு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஆனால் சென்னை விமான நிலையத்தில், இரவு நேரம் தொடங்கி அதிகாலை வரையில், சர்வதேச விமான நிலையத்தில், ஒட்டு மொத்தமாக ஏராளமான விமானங்கள் வருவதும், அதேபோல் இங்கிருந்து புறப்பட்டுச் செல்வதுமாக இருப்பதால், அந்த நேரங்களில், கடுமையான போக்குவரத்து நெரிசல்கள், சென்னை விமான நிலையத்திற்குள் ஏற்படுகிறது.
பொதுமக்கள் கோரிக்கை
எனவே அப்போது எந்த வாகனமும், 15 நிமிடங்களுக்குள் வெளியில் செல்வது என்பது நடக்காது. இதனால் அதை போல் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு, கூடுதலாக போக்குவரத்து காவலர்களை, அப்பகுதியில் பணிக்கு அமர்த்தி, வாகன போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைப்போல் 15 நிமிடங்கள் என்பதை, மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் நலன் கருதி, 20 நிமிடங்களாக அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனர்.





















