கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் - காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள்
இலங்கை கடற்படையினரால் அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்ததில், மீனவர் மைக்கேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
நேற்று பகலில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மன்னார் தாழ்வு பாடு கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.அங்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களை இலங்கை கடற்படையினர் அடித்து சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதில், மூன்று பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் மைக்கேல் என்பவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இங்குள்ள மீனவர்கள் மத்தியில் பெரும் பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 43 ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்த பரபரப்பு அடங்குவதற்குள், மண்டபம் பகுதி மீனவர்கள் 12 பேரை நேற்று பகலில் கைது செய்து இலங்கை கடற்படையினர் அட்டகாசம் செய்தனர்.
ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள் மீன்பிடிக்க சென்ற 55 மீனவர்களையும், அவர்களது 8 மீன்பிடி விசைப்படகுகளையும், எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து அனுமதியின்றி மீன் பிடித்தாக வழக்கு பதிவு செய்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரே நாளில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 55 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து இலங்கைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் மீனவ கிராமங்களில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ள ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் பேருந்து நிலையம் எதிரே உள்ள இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சித்திரவதை செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது இதற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.
நேற்று காலை ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 140 க்கும் மேற்பட்ட மீன் பிடி விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அருளானந்தம் மற்றும் சவரிராஜ் ஆகியோரது இரண்டு விசைப்படகுகளில் சென்ற சிலுவை, இன்னாசி, மைக்கேல், ராமநாதன், ஜாக்சன், அந்தோணி உள்ளிட்ட 12 மீனவர்களையும் அவர்கள் சென்ற படகையும் கைது செய்த இலங்கை கடற்படையினர் தாழ்வுபாடு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.
மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இலங்கை கடற்படையினரால் அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்ததில், மீனவர் மைக்கேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த சம்பவத்தை மறுக்கும் இலங்கை கடற்படையினர் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மீனவர் மைக்கேல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தரப்பில் விளக்கமளித்துள்ளனர். அழைத்துச் சென்ற இலங்கை கடற்படையினர் அங்கு வைத்து 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் தாக்கியதாகதால்தான் காயமடைந்த மீனவர் மைக்கேல் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.