புத்தாண்டை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 700 போலீசார் - நெல்லை எஸ்பி
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 41 சதவீதம் குறைந்துள்ளது. நடக்கவிருந்த 16 கொலை சம்பவங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, “நெல்லை மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் 32 சதவீதம் குறைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 41 சதவீதம் குறைந்துள்ளது. நடக்கவிருந்த 16 கொலை சம்பவங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் திருடு போன 367 வழக்குகளில் 254 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.2 கோடி மதிப்பிலான நகை, பணம் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இதுவே அதிகமான மீட்பு சதவீதமாகும். இந்த ஆண்டு நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் இருந்து 70 சதவீதம் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் நெல்லை மாவட்டத்தில்தான் சாலை விபத்துக்கள் குறைவாக நடந்துள்ளது. கிராமப்பகுதிகளில் 2700 சிசிடிவி கேமராக்கள் அமைத்துள்ளன. இது தமிழ்நாட்டில் முதன்முறையாக அனைத்து தாய் கிராமங்களிலும் நிறுவப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பல குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன. மேலும் 122 சைபர் குற்றவாளிகளின் வங்கி கணக்கில் இருந்த 1.75 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மோசடிகள் புகாரில் ரூ. 13.50 லட்சம் மீட்கப்பட்டு 23 பேருக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு மூலம் 10 கோடி மதிப்பிலான 31 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு 49 நபர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு புலன் விசாரணை முடிக்கப்பட்டு நிலுவையில் இருந்த 15 ஆயிரம் கோப்புகள் நீதிமன்ற வழக்கிற்கு எடுக்கப்பட்டது. மேலும் கொலை, போக்சோ வழக்குகள், வன்கொடுமை வழக்குகள் மற்றும் சாலை விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்ட 355 நபர்களுக்கு நிவாரணத்தொகையாக சுமார் 3 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு போக்சோ வழக்கில் 8 பேருக்கும், கொலை வழக்கில் 10 பேருக்கும் நீதிமன்ற தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. 2022 -ம் ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் 219 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நன்னடத்தை பிணையை மீறியவர்கள் 48 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிர ரோந்து பணியின் அடிப்படையில் 182 கிலோ கஞ்சாவும், 30 ஆயிரம் கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜாதி ரீதியிலான மோதல்களை தூண்டியதாக 80 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சுமார் 700 போலீசார் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்” என தெரிவித்தார்.