தூத்துக்குடி விமான நிலையம்: பிரதமர் வருகை! சர்வதேச அந்தஸ்து, சரக்கு போக்குவரத்து கனவு நனவாகுமா?
பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவான எஸ்.பி.ஜி. குழுவினர் 100 பேர் தூத்துக்குடி வந்துள்ளனர். இன்று விமான நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள், பிரதமர் வந்து செல்லும் பகுதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்கின்றனர்.
தூத்துக்குடி விமான நிலையம் ரூ. 380 கோடி மதிப்பில் சர்வதேச தரத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விரிவாக்கப்பணி காரணமாக தூத்துக்குடிக்கு இரவிலும் விமானங்கள் வந்து செல்லும். விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த விமானநிலைய திறப்பு விழா நாளை 26-ந்தேதி நடைபெறுகிறது. அதனை பிரதமர் மோடி இரவு 8 மணிக்கு திறந்து வைக்கிறார்.
விழாவில் கூடங்குளம் அனுமின் நிலையத்தில் ரூ.548 கோடியில் 3 மற்றும் 4-வது அலகில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்றுவதற்கான மின்பரிமாற்ற அமைப்புக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் ரூ.4,500 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதோடு புதிய திட்டப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.
பாதுகாப்பு பணி
இதற்காக விமான நிலைய வளாகத்தில் பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் விமான நிலைய வளாகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. பிரதமர் வருகையை முன்னிட்டு விமான நிலைய வளாகம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய பயணிகள் முனையம் பகுதிக்கு செல்ல யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. அந்த பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய பாதைகளில் சோதனை சாவடிகள் அமைத்து முழு பரிசோதனைக்கு பின்னரே ஊழியர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். பிரதமரின் வருகையை முன்னிட்டு தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் நெல்லை சரக டி.ஜ.ஜி. சந்தோஷ் ஹதிமணி, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் அடங்கிய சுமார் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் அடங்கிய 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. அதே போன்று கடலோர காவல்படையினர், கடலோர பாதுகாப்பு போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று தனி விமானங்கள் சில தூத்துக்குடியில் இறக்கப்பட்டு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவான எஸ்.பி.ஜி. குழுவினர் 100 பேர் தூத்துக்குடி வந்துள்ளனர். அவர்கள் இன்று விமான நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள், பிரதமர் வந்து செல்லும் பகுதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, தமிழக பாதுகாப்பு படையினர், கமான்டோ படையினரும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை ஆய்வு செய்தனர். மேலும் பாதுகாப்பு மற்றும் நவீன தொலைதொடர்பு கருவிகள் அடங்கிய வாகனங்களும் தூத்துக்குடி வருகின்றன. பிரதமர் வருகையையொட்டி இன்று காலை 6 மணி முதல் 48 மணி நேரத்திற்கு தூத்துக்குடி விமான நிலையம் முழுவதும் மத்திய அரசின் பாதுகாப்பு படை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
சரக்கு போக்குவரத்து!
சர்வதேச விமான நிலைய கோரிக்கை என்பது ஒருபுறம் இருக்க தற்போது கஷ்டம் விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதாவது சுங்கவசதிகள் கொண்ட விமான நிலையம் தான் கஷ்டம் விமான நிலையம் ஆகும். இங்கு சர்வதேச விமானங்களை இயக்க முடியும். ஆனால் முழுமையான அளவில் சர்வதேச விமான நிலையமாக இது செயல்படாது. பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்ய முடியும். இதற்கு மத்திய நிதி அமைச்சகத்தின் அனுமதி தரப்பட வேண்டும். அந்த அனுமதி கிடைக்க பட்ட பின்னர் இங்கு சரக்கு போக்குவரத்தை தொடங்கலாம். குறிப்பிட்ட சில நாடுகளுக்கு இந்த சரக்கு போக்குவரத்து சேவை முதலில் கிடைக்கும்.
தூத்துக்குடியின் கடல் சார் மற்றும் விவசாய பொருட்களுக்கு வெளிநாட்டில் நல்ல தேவை உள்ளது. அதை பயன்படுத்தி இங்கு சரக்கு போக்குவரத்துக்கான விமான சேவை உருவானால் தூத்துக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய மற்றும் மீன்வளத்துறை நன்கு வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி விமான நிலையம் கிளஸ்டர் 2 வகையாக உள்ளது. தற்போது புதுப்பிக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் தரையிறங்கும் வசதி, இரவு நேர விமானங்களை கையாள்வதற்கான அனுமதி ஆகியவை கிடைக்கப் பெற்றுள்ளது. விமானங்களை கையாள்வதற்காக பெரிதாக எந்த ஒப்பந்தமும் தேவையில்லை என்ற அடிப்படையில் மத்திய அரசு புதுப்பிக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை விரைவாக கஷ்டம் வசதிகள் கொண்ட விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.





















