பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா பெருந்திருவிழா கடந்த 23-ந்தேதி கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு தொடங்கியது. இதையொட்டி கோவிலில் தினசரி காலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேகங்கள், மதியம் அன்னதானம், மாலை 3 மணிக்கு சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை பரதநாட்டியம் போன்ற பல்வேறு கலைநிகழ்சிகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் ஒவ்வொரு திருக்கோலத்தில் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

இந்த நிலையில் விரதம் தொடங்கிய பக்தர்கள் கோவிலுக்கு வந்து கடலில் நீராடி வலது கையில் காப்புகட்டி தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராக மற்றும் பஜார் வீதிகளில் சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர். இதனால் திரும்பிய திசைகளில் எல்லாம் தசரா பக்தர்களாக தெரிகிறது. கடந்த 28-ந்தேதி முதல் தசரா குழுவினர் மேளம், தாரை தப்பட்டை மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் காப்பு கட்ட தொடங்கினர். மறுநாள் ஊர் பெயரோடு அமைந்த தசரா குழுவினர் ஊர் ஊராக சென்று கலைநிகழ்ச்சி நடந்தி அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்தனர்.நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் உள்ள முக்கிய ஊர்களில் தசரா பக்தர்கள் மற்றும் தசரா குழுவினர் அதிக அளவில் காணப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் அம்மன் பெயரில் வசூல் செய்த பணத்தை 10-ம் திருநாளான இன்று இரவு காணிக்கையை கோவில் உண்டியலில் கொண்டு சேர்ப்பார்கள்.

இதற்கு பக்தர்களுக்கு வசதியாக கோவிலை சுற்றி தற்காலிக உண்டியல்கள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. 2-ந் தேதி இன்று 11.30 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்மவாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு செல்லும் போது காளி வேடம் மற்றும் சுவாமி வேடம் அணிந்த பக்தர்கள் ஒம்காளி, ஜெய்காளி என ஆக்ரோஷமாக கோஷமிட்டு முத்தாரம்மனை பின்தொடந்து செல்வார்கள்.
சுமார் 20 லட்சம் பக்தர்கள் கூடும் கடற்கரையில் அம்மன், மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.தொடர்ந்து நள்ளிரவு 1 மணிக்கு கடற்கரை மேடையிலும் தொடர்ந்து 2 மணிக்கு சிதம்பரேஸ்வரர் கடற்கரை மேடையில் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதை தொடர்ந்து 3-ந் தேதிஅதிகாலை பூஞ்சப்பரத்தில் அன்னை முத்தாரம்மன் வீதியுலா புறப்படுதல், பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம், மாலை 4.30 மணிக்கு சப்பரம் கோவிலுக்கு வந்து சேர்ந்தவுடன் பக்தர்கள் காப்பு களைந்து விரதம் முறிப்பார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.
12-ம் திருவிழாவான 4-ந் தேதி காலை 6 மணி, 8 மணி, 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் ஏற்பாட்டில் சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடக்கிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு தேவயைான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்காக தற்காலிக வாகன நிறுத்தும் இடங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார் ஈடுபடுகின்றனர். மேலும் டிரோன் மற்றும் ஏ.ஐ.தொழில்நுட்ப வசதிகளுடன் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.






















