அகில இந்திய ஹாக்கி போட்டி - டெல்லியை வீழ்த்தி கோவில்பட்டி அணி அசத்தல்
கோவில்பட்டி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணியும் நியூ டெல்லி, சென்ட்ரல் செக்ரிட்டேட் அணியும் மோதின.போட்டியின் முடிவில் 3:2 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணி வெற்றிப் பெற்றது.
கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கி போட்டியில் டெல்லியை வீழ்த்தி கோவில்பட்டி அணி வெற்றி பெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் மே 24ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அகில இந்திய அளவிலான பல்வேறு ஹாக்கி அணிகள், அதாவது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் - அகமதாபாத், சென்ட்ரல் செக்ரிட்டேட் - நியூ டெல்லி, சவுத் சென்ட்ரல் ரயில்வே - செகந்திராபாத், என்.சி.ஓ.இ. (நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்) - போபால் மற்றும் எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் - கோவில்பட்டி உட்பட 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது.
நான்காம் நாள் நடைபெற்ற போட்டியில் சென்னை, அக்கவுண்டண்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் அணியும் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியும் மோதின. இதில் 3:1 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி வெற்றிப் பெற்றது. 3வது போட்டியில் சென்னை, இன்டக்ரல் கோச் பேக்டரி அணியும் பெங்களூரு, கனரா பேங்க் அணியும் மோதின. இதில் 6:2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு, கனரா பேங்க் அணி வெற்றிப் பெற்றது.
4வது போட்டியில் கோவில்பட்டி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணியும் நியூ டெல்லி, சென்ட்ரல் செக்ரிட்டேட் அணியும் மோதினபரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆட்டத்தின் தொடக்கம் முதலே கோவில்பட்டி அணி வீரர்கள் வெகு சிறப்பாக தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் பாதியில் இரண்டு கோல்கள் அடித்து முன்னிலை வகித்தனர், மற்றொரு பாதி ஆட்டத்தில் கோவில்பட்டி அணி மேலும் ஒரு கோல் அடித்தனர்.போட்டியின் முடிவில் 3:2 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணி வெற்றிப் பெற்றது.
ஐந்தாம் நாளான நடைபெற்ற இன்று முதல் போட்டியில் போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணியும் ஒடிஷா, டாடா நாவல் ஹாக்கி அகாடமி அணியும் மோதின. இதில் 4:3 என்ற கோல் கணக்கில் போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி வெற்றிப் பெற்றது.மாலை நடைபெறும் போட்டிகளில் சென்னை, இன்கம் டேக்ஸ் அணியும் மும்பை, யூனியன் பேங்க் அணியும் மோதுகின்றன.ஹைதராபாத், ஸ்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆப் இந்தியா அணியும் சென்னை, தமிழ்நாடு லெவன் அணியும் மோதுகின்றன.சென்னை, இந்தியன் பேங்க் அணியும் புபனேஸ்வர், நிஸ்வாஸ் அணியும் மோதுகின்றன.