வேளாண் சட்டத்திற்கு எதிரான முதல்வரின் அறிவிப்பு; பி.ஆர்.பாண்டியன் வரவேற்பு
வேளாண் சட்டத்திற்கு எதிரான முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பிற்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசிற்கு எதிராக மன்னார்குடியில் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு அறிவித்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த ஆறு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனையொட்டி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பிஆர் பாண்டியன் அவரது வீட்டில் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது..
‛‛தமிழகத்தில் சம்யுக்த கிசான் மோர்ச்சா போராட்டக்குழு அறிவிப்பை ஏற்று இன்றைய தினத்தை கருப்பு தினமாக பின்பற்றப்படுகிறது. அதனை அடையாளப்படுத்தும் விதமாக வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும் விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இன்றோடு டெல்லி போராட்டம் ஆறு மாத காலங்களை கடந்து விட்டது. உயிரை பணயம் வைத்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வருகிறார்கள் அவர்களை அழைத்துப் பேச பிரதமர் மோடி மறுத்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மாறாக போராட்டத்தை திசை திருப்பவும், கொச்சைப்படுத்தும் மோடி எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்திருக்கிறது. இனியும் காலம் கடத்தாமல் உடனடியாக அழைத்து பேசி சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற உத்திரவாதத்தை இன்றைய தினம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டிருப்பது வரவேற்க்கத்தக்கது. இது போராட்டக் களத்தில் உள்ள விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் செய்தியாக வெளிவந்திருக்கிறது. இதன் மூலம் வேளாண் விரோத சட்டத்திற்கு எதிராக தென்னிந்தியாவில் திருப்புமுனையை உருவாக்கும் என நம்புகிறோம்.
காவிரியின் குறுக்கே கர்நாடகா மேகதாது அணை கட்டுவதற்கு ரூ 9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து கட்டுமானப் பணிகளை கடந்த மார்ச் மாதம் துவங்கி உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தீவிரமடைந்த நிலையில் சட்டவிரோத அணை கட்டுமான பணியை கர்நாடகம் துவங்கியது.இதனை எதிர்த்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கடந்த மார்ச் 28ஆம் தேதி சத்தியமங்கலம் வழியாக மேகதாது அணையை முற்றுகையிட சென்ற விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 12ஆம் தேதி நேரடியாக மேகதாட்டு பகுதியை பார்வையிட்டு 7 பேர் கொண்ட குழு உண்மை நிலையை கண்டறிந்து கட்டுமான பணிகளுக்கு கட்டுமான பொருட்களை குவித்துள்ளது குறித்து ஆதாரத்தோடு பத்திரிக்கை, ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டோம். காவிரி மேலாண்மை ஆணையம் உடனடியாக தலையிட வேண்டும் தமிழக அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடவேண்டும்.தமிழக அரசு தடுத்து நிறுத்த சட்டப் போராட்டங்கள் தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தோம்.
இந்நிலையில் தென்னிந்திய பசுமை தீர்ப்பாயம் பத்திரிக்கை ஊடகங்களில் வந்த செய்தியின் அடிப்படையில் சட்டவிரோதமாக கர்நாடகம் அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவதற்கு நேரில் ஆய்வு செய்து உண்மை நிலையை ஜூலை 5ஆம் தேதிக்குள் அறிக்கையாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் செய்தியாக வந்திருக்கிறது.
எனவே இனியாவது காலம் தாழ்த்தாது உடனடியாக தமிழகத்தில் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடவேண்டும்.தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும்.காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாகக் கூட்டி கர்நாடக அரசின் நயவஞ்சக நடவடிக்கைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்தும் வரையிலும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் போராட்டம் ஓயாது,’’ என்றார்.