வயல்களை வேட்டையாடும் காட்டுப்பன்றிகள்! - குறைகளை கொட்டித் தீர்த்த விவசாயிகள் - தீர்வு எப்போது?
நடுப்படுகையில் காட்டுப்பன்றிகளால் அறுவடைக்கு தயார் நிலையிலுள்ள நெற் பயிர்கள் சேதமடைந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூர்: பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும், நிவாரணம் கோரும் விவசாயிகளுக்கு அடங்கல் தர மறுக்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் இலக்கியா தலைமையில் நடந்தது. இதில் விவசாயிகள் பேசியதாவது:
தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: வேளாண் பொறியியல் துறை மூலம் வாடகைக்கு வழங்கப்படும் டிராக்டர்களுக்கு டீசல் இல்லாததால் இயக்க முடியாமல் கிடக்கிறது. இதனால், நிலக்கடலை, உளுந்து உள்ளிட்ட பயிர் சாகுபடிகளைத் தொடங்க முடியவில்லை. எனவே, டீசல் ஏற்பாடு செய்து தர வேண்டும். விவசாயிகள் வேளாண் பணிகளை தொடங்க இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணத்திடல் சிவகுமார்: மேட்டூர் அணை ஜனவரி 28 ஆம் தேதியுடன் மூடப்படுதால், அதுவரை முறை வைக்காமல் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் சாகுபடி பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். எனவே இதுகுறித்து பரிந்துரை செய்ய வேண்டும்.
அம்மையகரம் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர்: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் கோரும் விவசாயிகளுக்காக விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரேஷன் கார்டு, கணினி சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் அடங்கல் சான்று, ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவை இணைக்க வேண்டும் என வேளாண் துறையினர் கூறுகின்றனர். ஆனால், வயல்களில் தண்ணீர் வடிந்துவிட்டது எனக் கூறி கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கல் தர மறுக்கின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு அடங்கல் தர செய்ய வேண்டும்.
கோட்டாட்சியர்: அடங்கல் வழங்குமாறு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுறுத்துகிறேன்.
ஆம்பலாப்பட்டு தங்கவேல்: பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண் அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோனேரிராஜபுரம் கே.எஸ். வீரராஜேந்திரன்: மாவட்ட கலெக்டர் பயிர் காப்பீடுக்கு தனி அலுவலகம் அமைக்க வேண்டும்.
கூத்தூர் ரெங்கராஜன்: நடுப்படுகையில் காட்டுப்பன்றிகளால் அறுவடைக்கு தயார் நிலையிலுள்ள நெற் பயிர்கள் சேதமடைந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோட்டாட்சியர்: காட்டுப்பன்றிகளைத் தடுக்க ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியில் மருந்து வழங்கப்படுகிறது.
ஓலத்தேவராயன்பேட்டை அறிவழகன்: மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கோருவதற்கான விண்ணப்பத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும்.
நாகாச்சி கோவிந்தராஜ்: பயிர் அறுவடை சோதனையை எங்கே, எப்போது நடத்தப்படுகிறது என்ற தகவல் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படுவதில்லை. ரகசியமாக நடத்தப்படும் இச்சோதனையில் பல்வேறு குளறுபடிகள் நிலவுகின்றன. எனவே, பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் தனியாரை அனுமதிக்காமல், அரசே ஏற்று நடத்த வேண்டும். மேலும் பயிர் அறுவடை சோதனையை ஒலிப்பெருக்கு வாயிலாக தெரிவிக்க வேண்டும்.
வாளமர்கோட்டை இளங்கோவன்: வடிகால்களைத் தூர் வாரி சீரமைத்திருந்தால், மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டிருக்காது. இனிமேலாவது நீர் நிலைகளைத் தூர் வாரி சரியாக பராமரிக்க வேண்டும். நீர் மேலாண்மையில் அரசு கவனம் செலுத்த வேண்டும். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடக்கூர் பழனியப்பன்: திருமங்கலக்கோட்டையில் அக்டோபர் மாதம் பெய்த மழையால் 100 ஏக்கர் அளவுக்கு நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டன. நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.