பிரமாண்டத்தின் உச்சம்... வெல்லும் தமிழ் பெண்கள் திமுக மகளிர் அணி மாநாட்டிற்கு 100 ஏக்கரில் பந்தல்
செங்கிப்பட்டி அருகே “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு 26.01.2026 திங்கட்கிழமை அன்று மாலை 4 மணி அளவில் நடக்க உள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் 200 ஏக்கரில் மிக பிரமாண்டமாக வெல்லும் தமிழ் பெண்கள் திமுக மகளிர் அணி டெல்டா மண்டல மாநாடு வரும் 26ம் தேதி நடக்கிறது. 100 ஏக்கரில் மாநாட்டு பந்தலும், மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்த 100 ஏக்கரும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெல்லும் தமிழ் பெண்கள் திமுக மகளிர் அணி மாநாடு வரும் 26ம் தேதி தஞ்சை அருகே உள்ள செங்கிப்பட்டியில் நடக்கிறது. இந்த மாநாட்டில் சுமார் 1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டின் முன்னேற்பாடு பணிகள் திமுக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு மேற்பார்வையில் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் மகளிர் மேம்பாட்டுக்கென தொடர்ச்சியான திட்டங்களை வகுத்து, 1.31 கோடி மகளிருக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’, ‘விடியல் கட்டணமில்லா பேருந்துப் பயணம்’, கல்வி கற்கும் மாணவிகளுக்கு ‘புதுமைப் பெண் திட்டம்’, வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான ‘தோழி விடுதி’, இந்தியாவிலேயே அதிக அளவாக 43 சதவீதம் வேலைக்கு செல்லும் பெண்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், கடந்த 29.12.2025 அன்று திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், “பார் சிறுத்ததோ, படை பெருத்ததோ” என்று சொல்லத்தக்க வகையில், “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு கருப்பு சிகப்பு மகளிர் அணி படையின் மாபெரும் எழுச்சியோடு வெற்றிகரமாக நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க- இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்புரையாற்ற, திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு முன்னிலையில், துணைப் பொதுச் செயலாளர் எம்.பி., கனிமொழி தலைமையில் தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு 26.01.2026 திங்கட்கிழமை அன்று மாலை 4 மணி அளவில் நடக்க உள்ளது.
இந்த மாநாட்டில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ. பெரியசாமி, க.பொன்முடி, திருச்சி சிவா, எம்.பி., ஆ.ராசா, எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக மகளிர் அணித் தலைவர் விஜயா தாயன்பன் உட்பட பலர் பங்கேற்று பேச உள்ளனர்.
இந்த மாநாட்டின் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு வெகு சிறப்பாக நடத்த முன்னேற்பாடு பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார். 200 ஏக்கரில் மிக பிரமாண்டமாக இந்த மாநாடு நடக்கிறது. 100 ஏக்கரில் மாநாட்டிற்கான பந்தல் அமைக்கும் பணிகள் வெகு வேகமாக நடந்து வருகிறது. 100 ஏக்கரில் வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாநாடு நடக்கும் திடல் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டு வெகுவேகமாக பணிகள் நடந்து வருகிறது.
இந்த மாநாட்டில் 1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டில் பங்கேற்பவர்களுக்காக தட்டுப்பாடில்லாத தரமான குடிநீர் வசதி, 200க்கும் அதிகமான மொபைல் டாய்லெட் வசதி, பேருந்து வசதி என வெகு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1.25 லட்சம் பேருக்கு புடவைகள், இளம் வயதினருக்கு சுடிதார் போன்றவை தயாராகி விட்டது. மேலும் மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு கைப்பையில் ஸ்நாக்ஸ் வழங்கப்பட உள்ளது. இதில் கேக், மிக்சர், குடிநீர் பாட்டில், பிஸ்கெட், ஹாட்பாக்சில் பிரியாணி போன்றவை வழங்கப்பட உள்ளது என்று தெரிய வந்துள்ளது. மிகவும் பிரமாண்டமாக நடக்கும் இந்த மாநாடு தேர்தலுக்கு முன்பாக நடப்பதால் அரசியல் அரங்கே உற்று நோக்கும் வகையில் அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகள் மகளிர் அணியினரை அழைத்து வந்து மாநாடு முடிந்தவுடன் பாதுகாப்புடன் வீடுகளுக்கு அனுப்ப தேவையான அனைத்து ஏற்பாடுகளும், வாகன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக மாநாடு நடக்கும் திடலில் நடந்து வரும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு உட்பட அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், வெல்லும் தமிழ் பெண்கள் டெல்டா மண்டல மகளிர் மாநாடு பிரமாண்ட முறையில் நடைபெற உள்ளது.. எல்லாருக்கும் எல்லாம் என்ற வகையில் மீண்டும் திமுக ஆட்சி அமைய மண்டல மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகிறது என்றார்.
இந்த டெல்டா மண்டல மாநாடு அரசியல் அரங்கில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.





















