Vaikasi Visakam: காடந்தகுடி முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தை ஒட்டி சிறப்பு வழிபாடுகள்
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகில் உள்ள காடந்தகுடி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகில் உள்ள காடந்தகுடி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது.
வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம்.
இந்நாள் சோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும்.
விசாகன் என்றால் மயில் மீது ஏறி வருபவன் என்று பொருள். தனது பக்தர்களின் துன்பங்களை போக்குவதற்காக மயில் மீது பறந்து, உடனடியாக வந்து நிற்கக் கூடியவர் முருகப் பெருமான். முருகா என்று அழைத்தால் வந்த வினையும், வருகின்றன வல்வினையும் ஓடி விடும் என்பார்கள். முருகப் பெருமானை வழிபட்டாலே, முருகனின் அருள் மட்டுமல்ல சிவ பெருமான் மற்றும் பராசக்தியின் அருளும் கிடைத்து விடும்.
பொதுவாக குழந்தை வரம் வேண்டுபவர்கள் முருகப் பெருமானுக்கு சஷ்டி திதியில் விரதம் இருப்பார்கள். அவர்கள் முருகன் அவதரித்த வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து வழிபட்டால், அடுத்த ஆண்டு வைகாசி விசாகத்திற்குள் நிச்சயம் குழந்தைப் பேறு ஏற்படும். அதே போல் கணவன் - மனைவிக்குள் ஒற்றுமையில்லை, வீட்டில் எப்போதும் சண்டை, கணவன் - மனைவிக்குள் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது என்பவர்கள், தொழிலில், செய்யும் வேலையில் முன்னேற்றமே இல்லை, முன்னேறுவதற்கு ஏதாவது ஒரு தடை இருந்து கொண்டே இருக்கிறது என்பவர்கள், நீண்ட காலமாக நோயால் அவதிப்படுபவர்கள், வழக்கு விவகாரங்கள் சிக்கிய தவிப்பவர்கள் ஆகியோர் வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகப் பெருமானிடம் தங்களின் கோரிக்கையை முன் வைக்கலாம்.
அந்த அளவிற்கு சிறப்புகள் வாய்ந்த வைகாசி விசாகத் திருவிழா தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மதுரபாஷாணிபுரம்- காடந்தகுடியில் செல்வவிநாயகர், பாலமுருகன், முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பாக நடந்தது.
இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த மாதம் 30-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து, 31-ந்தேதி குழந்தைகளுக்கான அகல் விளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், சுமங்கலி பெண்களுக்கான விளக்கு பூஜையும் நடைபெற்றது.
இந்த பூஜையில் ஏராளமான பெண்கள் மஞ்சள் பொடி, குங்குமம், அருகம்புல், பச்சரிசி உள்ளிட்ட 10-ற்கும் மேற்பட்ட பொருட்களை கொண்டு வந்து அமர்ந்து விளக்கேற்றி பூைஜயில் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதனை அடுத்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பூஜையில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்துமாவிளக்கு போடுதல், பால்குடம், பால் காவடிகள் எடுத்து வரும் நிகழ்ச்சியும், மதியம் சிறப்பு அன்னதானமும், தொடர்ந்து, 3 மணிக்கு அம்மன் குளக்கரையில் இருந்து செடில் காவடி எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடந்தது.
இன்று (3-ந்தேதி) பாலமுருகன் வீதிஉலாவும், இரவு 7 மணிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை மதுரபாஷாணிபுரம்- காடந்தகுடி கிராமக்கள் செய்து வருகின்றனர்.