Thanjavur: குறுவை சாகுபடிக்காக குஜராத்தில் இருந்து யூரியா உரம் தஞ்சைக்கு வந்தது
முப்போகமும் நெல் விளைச்சல் பெறுவதால்தான் தஞ்சாவூர் நெற்களஞ்சியம் என போற்றப்படுகிறது.
தஞ்சாவூர்: குறுவை சாகுபடிக்கு தேவையான யூரியா உரம் குஜராத்தில் இருந்து தஞ்சைக்கு வந்தது.
சோழநாடு சோறுடைத்து என்ற பழமொழிக்கு ஏற்ப ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டங்களில் முப்போகமும் நெல் சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர். குறுவை, சம்பா, தாளடி மற்றும் கோடை நெல் சாகுபடி என விவசாயிகள் நெற்களஞ்சியமாம் தஞ்சாவூரின் பெருமையை உயர்த்தி வருகின்றனர். முப்போகமும் நெல் விளைச்சல் பெறுவதால்தான் தஞ்சாவூர் நெற்களஞ்சியம் என போற்றப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு விவசாயியின் வீட்டிலும் தானியங்களை சேமித்து வைக்கும் குதிர்கள், பத்தாயங்கள் எனப்படும் தானிய சேமிப்பு கலன்கள் இருந்துள்ளது. இன்றும் இருக்கிறது. இத்தகைய பெருமையை கொண்டு விளங்கும் ஒருங்கிணைந்த டெல்டா மாவட்ட விவசாயிகள் வரும் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்ற தகவலால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
பொதுவாக காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். கடந்தாண்டு சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக முன்கூட்டியே மே மாதம் 24ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி இலக்கான 1,07,500 ஏக்கர் என்பதை தாண்டி 15 ஆண்டுகளில் இல்லாத அளவாக 1,82,040 ஏக்கர் என இலக்கை மிஞ்சி சாகுபடி நடந்தது. நடப்பாண்டு வரும் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
இதற்கிடையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக குஜராத்தில் இருந்து 2627 டன் யூரியா தஞ்சை வந்தது. தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து உர மூட்டைகள் லாரியில் ஏற்றப்பட்டு தஞ்சை, திருவாரூர், நாகை மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
இந்த சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும். தற்போது டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குறுவை நெல் சாகுபடிக்கு தேவையான 2,627 டன் யூரியா உரம் குஜராத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் நேற்று தஞ்சைக்கு வந்தது. 42 வேகன்களில் வந்த இந்த உரங்கள் தஞ்சையில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையம் மற்றும் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.