தஞ்சாவூர் ஊர்க்காவல் படையில் முதல்முறையாக திருநங்கை தேர்வு
தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் திருநங்கை தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறை.
தஞ்சாவூர் ஊர்க்காவல் படையில் திருநங்கை உள்பட 36 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் திருநங்கை தேர்வு செய்யப்பட்டார் என்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 36 பணியிடங்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் உடற்தகுதித் தேர்வும், சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்தது. தொடர்ந்து தகுதி அடிப்படையில் 34 ஆண்கள், ஒரு பெண், ஒரு திருநங்கை என மொத்தம் 36 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களுக்கு மாவட்ட எஸ்.பி., ரவளிப்ரியா கந்தபுனேனி பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதில் ஊர்க்காவல் படை உதவி சரக தளபதி செந்தில்குமார், மண்டல தளபதி சுரேஷ், துணை மண்டல தளபதி மங்களேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தேர்வு பெற்றவர்களுக்கு தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் இன்று முதல் 45 நாள்களுக்கு அடிப்படை பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் திருநங்கை தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கை!
அதிராம்பட்டினம் கடற்கரையோர மீனவ கிராமங்கள், புயல் பாதுகாப்பு இல்லங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். புயல் எச்சரிக்கை முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வங்க கடலில் புயல் சின்னம் உருவாகி இருப்பதையொட்டி தமிழகத்தின் கடற்கரையோர பகுதிகளில் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. தொடர்ந்து கடந்த ஆறு மணி நேரத்தில் வடமேற்கு திசையில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்தப் புயலானது, காரைக்காலுக்கு தென்கிழக்கில் 560 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கில் 640 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
தொடர்ந்து இது வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியை நோக்கி நெருங்கி நாளை 9ம் தேதி நள்ளிரவு புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்பகுதியான தம்பிக்கோட்டை மறவக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை உள்ளிட்ட கடற்கரையோர கிராமங்களில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தாழ்வான பகுதிகள், கடற்கரையோர மீனவ கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகள், புயல் பாதுகாப்பு இல்லங்கள், நகராட்சி அலுவலகம் ஆகிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ராமச்சந்திரன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.