“மீண்டும் நான் கிங்” ஒரே நாளில் ரூ.20 உயர்வு: தக்காளியால் குடும்பத் தலைவிகள் அதிர்ச்சி
தக்காளி ஆந்திரா, ஒடிசா, பெங்களூரு போன்ற மாநிலங்களில் இருந்தும் அதிக அளவு விற்பனைக்கு கொண்டு வரப்படும். தஞ்சை மார்க்கெட்டிற்கு தினமும் 25 கிலோ எடை கொண்ட 3000 பெட்டிகளில் தக்காளி விற்பனைக்கு வரும்.

தஞ்சாவூர்: மீண்டும் நான் கிங் என்று விலை உயர ஆரம்பித்து விட்டது தக்காளி. ஆமாங்க... விளைச்சல் இல்லாததால் வரத்து குறைந்தது. இதனால் தஞ்சையில் மீண்டும் தக்காளி விலை உயரத்தொடங்கி விட்டது. ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.20 அதிகரித்துள்ளதால் குடும்பத்தலைவிகள் ஷாக் ஆகியுள்ளனர்.
தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த காமராஜர் மார்க்கெட்டில் 300-க்கும் மேற்பட்ட மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பாக தக்காளி ஆந்திரா, ஒடிசா, பெங்களூரு போன்ற மாநிலங்களில் இருந்தும் அதிக அளவு விற்பனைக்கு கொண்டு வரப்படும். தஞ்சை மார்க்கெட்டிற்கு தினமும் 25 கிலோ எடை கொண்ட 3000 பெட்டிகளில் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறைந்து காணப்படுகிறது.
இதனால் கடந்த ஒரிரு நாட்களுக்கு முன்பு ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி நேற்று கிலோவுக்கு ரூ.20 அதிகரித்து கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளி வாங்க வந்த குடும்பத்தலைவிகள் விலையை கேட்டதோடு அதிர்ச்சியடைந்ததோடு, எப்பொழுதும் வாங்கும் அளவை காட்டிலும் குறைந்த அளவே வாங்கி சென்றனர். இன்றும் அதேநிலைதான் நீடித்து வருகிறது.
அதேபோல் உணவகங்களுக்கு காய்கறி வாங்குபவர்களும் தக்காளியை குறைந்த அளவிலேயே வாங்கிச் சென்றனர். தஞ்சை காமராஜர் மார்க்டெ்டிற்கு நேற்று 2,500 பெட்டிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது. வழக்கத்தை விட 500 பெட்டிகள் குறைவாக வந்தது. இன்னும் சில நாட்களில் தக்காளி விலை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து தக்காளி மொத்த வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், தஞ்சை மார்க்கெட்டிற்கு தமிழகத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், சின்னமனூர், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வரும். இது தவிர ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு வரும். ஆனால் வடமாநிலங்களில் தக்காளி விளைச்சல் இல்லாதால் அங்குள்ள வியாபாரிகள் ஆந்திரா, கர்நாடகாவிற்கு வந்து தக்காளியை வாங்கி செல்கிறார்கள். இதனால் தமிழகத்திற்கு வரத்து குறைந்துள்ளது.
இதே போல் தமிழகத்திலும் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளி விலை அதிகரிக்க தொடங்கி விட்டது. நேற்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் வரும் நாட்களிலும் தக்காளியின் விலை மேலும் அதிகரிக்கும் என்றனர்.
ஒரு நேரத்தில் தங்கத்தின் விலையை போல் நாளுக்கு நாள் விலை உயர்ந்து கொண்டே சென்றது தக்காளி. பின்னர் வரத்து அதிகரித்த நிலையில் 5 கிலோ 100 ரூபாய்க்கும், 6 கிலோ ரூ.100க்கும் விற்பனைக்கு வந்தது. கடந்த சில நாட்களாக கிலோ ரூ.20க்கும், ரூ.15 என கொஞ்சம் கொஞ்சமாக விலை மாறுபாட்டுடன் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் விலை உயர்ந்தது. தக்காளி இல்லாத சமையலா என்று கேட்கும் வகையில் மிக முக்கியான இடத்தை பிடித்துள்ளது. தக்காளிதான் நடுத்தர குடும்பங்களின் சாம்பார், சட்னிக்கு முன்னிலை வகிக்கும் காய்கறிகளில் ஒன்றாகும். இப்போது இந்த விலை உயர்வு நடுத்தர குடும்பங்களுக்கு ஷாக் தான்.





















