TNEB : போர்க்கொடி தூக்கும் மின்சார ஊழியார்கள்.. ஏப்ரல் மாத இறுதியில் கோட்டை முற்றுகை போராட்டம்...
மின்வாரியத்துறை 1957ம் ஆண்டு உருவான காலத்தில் இருந்து, 1972,84, 89, 96, 2004,2007 ஆண்டுகளில் மின்சார வாரியத்தில் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்: மின்வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இல்லை என்ற மின்துறை அமைச்சர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டித்து பிப்ரவரி, மார்ச் மாதத்தில் தர்ணா போராட்டமும், ஏப்ரல் மாத இறுதியில் கோட்டை நோக்கி பேரணி, முற்றுகை போராட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சி.ஐ.டி.யூ) மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் டி. ஜெய்சங்கர் தலைமை வகித்தார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார்.
இதையும் படிங்க: TN fishermen arrest: போராட்டம் எல்லாம் வீணா? மீண்டும் 14 தமிழக மீனவர்கள் கைது, இலங்கை கடற்படை அட்டூழியம்
கூட்டத்திற்கு பிறகு, ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: மின்வாரியத்துறை 1957ம் ஆண்டு உருவான காலத்தில் இருந்து, 1972,84, 89, 96, 2004,2007 ஆண்டுகளில் மின்சார வாரியத்தில் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்யப்பட்டனர். இதில் தி.மு.க., ஆட்சியில் நடந்தவை.
ஆனால், தமிழக மின்வாரியத்துறையில் ஒப்பந்த தொழிலாளர்கள் இல்லை என்று மின்துறை அமைச்சர் கடந்த 24ம் தேதி ஒரு தகவல் கூறியது தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புயல் மழை வெள்ள காலங்களில் மிகக்குறுகிய காலத்தில் சாய்ந்த மின் கம்பங்களை சீர் செய்து, அரசுக்கு பெருமை சேர்த்தது ஒப்பந்த தொழிலாளர்கள் தான். ஆனால் ஒப்பந்த தொழிலாளர் இல்லை என கூறியதை கண்டித்து, வரும் மார்ச் 25ம் தேதி, மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம். அதற்கு அடுத்த கட்டமாக ஏப்ரல் மாத இறுதியில் சென்னையில் கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம்.
கடந்த நான்கு ஆண்டு காலத்தில் 15 ஆயிரம் தொழிலாளர்கள் ஓய்வு பெற்று சென்றுள்ளனர். ஆனால், இந்த நான்கு ஆண்டு தி.மு.க., ஆட்சியில் மின்வாரியத்தில் காலி பணியிடங்கள் நிரப்பபடவில்லை. இந்நிலையில், அரசு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கொண்டு வர போகிறோம் என்கிறார்கள். மின்சாரம் தனியாருக்கு செல்வதற்கான முதல்படியாக தான் ஸ்மார்ட் மீட்டர் திட்டம். இதில், தனியார் நிறுவனம் மீட்டர்களை பொருத்தும், கணக்கீடு செய்யும், மின் துண்டிப்பு என அனைத்து பணிகளையும் அவர்களே செய்வார்கள். இதனால், மின்வாரியத்தில் கணக்கீட்டாளர், மின் துண்டிப்பு உள்ளிட்ட ஊழியர்களுக்கான வேலை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மின்வாரிய நுகர்வோருக்கு சரியான முறையில் சேவை செய்ய முடியாத நிலை உருவாகும்.
இதனால்தான் கேளராவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை அரசே கையாளும் என தெரிவித்துள்ளது. இதை போலவே தமிழக அரசும் செயல்படுத்த வேண்டும். இது போன்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வரும் 25ம் தேதி அனைத்து வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்பு தர்ணா போராட்டத்தை நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதில், மாநில தலைவர் டி. ஜெயசங்கர், பொருளாளர் எம்.வெங்கடேசன், சி.ஐ.டி.யூ மாநில பொதுச்செயலாளர் ஜி. சுகுமாறன், மாவட்ட செயலாளர் சி. ஜெயபால், மாவட்ட துணை செயலாளர் அன்பு, துணைப் பொதுச்செயலாளர்கள் பழனிவேலு, ரவிக்குமார், ரவிச்சந்திரன், பீர் முகமது ஷா, தஞ்சை மண்டல செயலாளர் ராஜாராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





















