திருச்சியிலிருந்து கல்லணைக்கு வந்து சேர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்- மக்கள் உற்சாக வரவேற்பு
தஞ்சாவூருக்கு 2 நாட்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியிலிருந்து கல்லணையிலிருந்து தண்ணீர் திறப்புக்காக இன்று மதியம் வந்து சேர்ந்தார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூருக்கு 2 நாட்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியிலிருந்து கல்லணையிலிருந்து தண்ணீர் திறப்புக்காக இன்று மதியம் வந்து சேர்ந்தார். அங்கு சிறிது நேரம் ஓயவெடுத்து மாலை 6 மணியளவில் கல்லணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறக்கிறார்.
தஞ்சாவூரில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி சிலை திறப்பு விழா, திருவையாறு எம் எல் ஏ துரை சந்திரசேகரன் இல்ல மணவிழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விமானம் மூலம் சென்னையிலிருந்து திருச்சி வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கல்லணைக்கு வந்தார். அங்கு முதல்வரை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வரவேற்றார். பின்னர் நீர்வள ஆதாரத்துறையின் ஓய்வு இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.
பின்னர் காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக இன்று மாலை 6 மணிக்கு காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறந்து வைக்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு தஞ்சாவூர் ராமநாதன் ரவுண்டானா பகுதியிலிருந்து 2 கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாக சென்று, பழைய பேருந்து நிலையம் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார். பின்னர் இரவு சுற்றுலா மாளிகையில் ஓய்வு எடுக்கிறார்.
நாளை (ஜூன் 16-ம் தேதி) காலை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் காலை நடை பயிற்சி மேற்கொள்கிறார். பின்னர் காலை 10 மணி அளவில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். பின்பு காலை 11 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு மன்னர் சரபோஜி அரசு கலை கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நலத்திட்ட விழாவில் பங்கு பெற்று பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்குகிறார். பின்னர் சுற்றுலா மாளிகை சென்று ஓய்வெடுக்கும் முதல்வர் மாலை 4 மணிக்கு கார் மூலமாக திருச்சி விமான நிலையம் சென்று சென்னை செல்கிறார்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தஞ்சை வருவதை ஒட்டி தஞ்சை மத்திய வடக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது. மாநகரம் முழுவதும் கொடிகள் நடப்பட்டு உள்ளது. தஞ்சைக்கு முதல்வரின் வருகையால் தஞ்சை மாநகரம் முழுவதும் விழாக்கோலம் கொண்டது. பாதுகாப்புக்காக 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.






















