TN 12th Result 2025: பிளஸ்-2 தேர்வு முடிவுகள், பயத்தால் உயிரை மாய்த்த மாணவி- தஞ்சையில் சோகம்
TN 12th Result 2025: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் பிளஸ் டூ ரிசல்ட் இல் தான் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் பிளஸ் டூ ரிசல்ட் இல் தான் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், படுகை புதுத் தெருவை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. விவசாயியான இவரது மகள் ஆர்த்திகா (17) பாபநாசத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 தேர்வு எழுதி ரிசல்டுக்காக காத்திருந்தார்.
இந்த நிலையில், இன்று(08.05.25) மகளை காணாத அவரது பெற்றோர் வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகைக்கு சென்று பார்த்தபோது ஆர்த்திகா துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர், அவர்கள் ஆர்த்திகாவை பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆர்த்திகா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பாபநாசம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று +2 ரிசல்ட் வெளியாவதையொட்டி, எங்கே தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் தான் அங்கிருந்த துப்பட்டாவில் மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)






















