திருவாரூர்: விநாயகர் ஊர்வலத்திற்கு வெளியூர் ஆட்களுக்கு அனுமதியில்லை
ஊர்வலத்தில் உள்ளுரை சேர்ந்த 5000 பேர் என்றாலும் செல்லலாம் . ஆனால் வெளியூரிலிருந்து வருவதை தவிர்க்க வேண்டும். வெளியூரிலிருந்து வருபவர்களுக்கும் அடையாளம் தெரியாத நபர்களுக்கும் அனுமதியில்லை.
முத்துப்பேட்டையில் செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறும் விநாயகர் ஊர்வலத்திற்கு வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு அனுமதியில்லை என்ற் திருவாரூர் எஸ்பி கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அடுத்த மாதம் 06ம் தேதி இந்து முன்னணி சார்பில் 30ஆம் ஆண்டு வெற்றி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த ஊர்வலத்தில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க காவல்துறை சார்பில் பாதுகாப்பு மற்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில், முத்துப்பேட்டையில் போலீசார் மற்றும் விநாயகர் சிலை ஊர்வலம் அமைப்பாளர்கள் கலந்துக்கொண்ட ஆலோசனை கூட்டம் திருவாரூர் எஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் விநாயகர் சிலை ஊர்வலம் கமிட்டியை சேர்ந்த பாஜக மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, மாவட்ட துணைத்தலைவர் மாரிமுத்து, உட்பட பலரும் கலந்துக்கொண்டு ஊர்வலம் சிறப்பாக நடைபெற எங்களுக்கு உரிய பாதுகாப்பு தரவேண்டும், திட்டமிட்டு சில அமைப்புகள் செய்யும் குளறுபடிகளை முன்கூட்டியே சரி செய்ய வேண்டும் என பேசினார்கள்.
இதற்கு பதிலளித்து திருவாரூர் எஸ்பி சுரேஷ்குமார் பேசுகையில், ஊர்வலத்தில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாத வகையில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒரு சிலைக்கு ஒரு ஏடிஎஸ்பி அல்லது டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், பத்து போலீசார் என்ற வீதத்தில் அவர்கள்தான் முழு பொறுப்பு என பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஊர்வலத்தில் உள்ளுரை சேர்ந்த ஆயிரம் பேர் என்றாலும் ஐந்தாயிரம் பேர் என்றாலும் செல்லலாம். ஆனால் வெளியூரிலிருந்து நபர்கள் வருவதை தவிர்க்க வேண்டும். வெளியூரிலிருந்து வருபவர்களுக்கும் அடையாளம் தெரியாத நபர்களுக்கும் அனுமதியில்லை. உள்ளுர் நபர்களால் என்றும் பிரச்சனை இல்லை வெளியூர் நபர்களால்தான் பிரச்சனைகள். அதனால் இந்த நடவடிக்கை மேற்க்கொள்ள இருக்கிறோம். அதேபோல் ஊர்வலத்தில் செல்பவர்கள் அடுத்த மதத்தை புண்படுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டும். ஊர்வலத்தன்று வெளியூரிலிருந்து வரும் சிறப்பு அழைப்பாளர்களை ஊர்வல கமிட்டியினர் சம்பந்தப்பட்ட பாதுக்காப்பு அதிகாரியை தொடர்புக்கொண்டு அழைத்து வரவேண்டும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து எஸ்.பி சுரேஷ்குமார் தலைமையில் 540 காவல்துறையினர் அணி வகுப்பு பேரணியை நடத்தினர். முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த அணிவகுப்பு பேரணி ஆசாத் நகர் பழைய பேருந்து நிலையம் வழியாக செம்படவன் காடு ரயில் நிலையத்தில் முடிவடைந்தது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெறும் விநாயகர் ஊர்வலத்திற்கு திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் கலந்து கொள்வர். குறிப்பாக திருவாரூர் மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாவட்டமான தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் இந்து முன்னணியினரை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொள்வர். கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா தொற்றின் காரணமாக தனித்தனி நபராக இருசக்கர வாகனத்தில் விநாயகரை எடுத்துச் சென்று ஆற்றில் கரைத்து வந்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டு திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள சுரேஷ்குமார் கலந்து கொள்ளும் முதல் விநாயகர் ஊர்வலம் ஆகையால் அனைத்து தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.